பக்கம்:எனது நண்பர்கள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  101

“ஊருக்கு” என்றோம். “அதுதான் முடியாது; வீட்டிற்கு வந்து விருந்து அருந்தித்தான் போக வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள், அவர் அன்பை நினைந்து மனமுருகி ஒப்பினோம். அன்று இரவு அவரில்லத்தில் பெரிய அளவில் விருந்து நடந்தது. அதில் தில்லி நகரில் தமிழகத்திலிருந்து பணிபுரியச் சென்ற பெரிய அதிகாரிகள் பலரும் பங்கு பெற்றனர். பிரியா விடை பெற்றுப் பெரு மகிழ்வோடு திரும்பினோம். திரும்பும்போதே எங்களிடம் சொன்னார்கள், “மகிழ்ச்சியோடு செல்லுங்கள்” இனி தோல்களை கப்பலில் ஏற்றிய உடனேயே 100க்கு 80 வீதம் ரூபாய் உங்களுக்கு இங்கேயே கிடைக்கும்’ என்று.

“என் வாழ்நாளில் இப்படி ஒரு நன்மையை கேட்ட உடனேயே செய்த பேரன்பரை நான் கண்டதில்லை” என்று என்னுடன் வந்திருந்த தோல் வியாபாரிகளாகிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களும், மலங்கு அகமது பாஷா அவர்களும், திருச்சி பாலக்கரை வி. எஸ். அவர்களும் பெரிதும் பாராட்டினார்கள். இது சர்.ஏ.ஆர். முதலியார் அவர்களின் தொண்டுக்கு எடுத்துக்காட்டான ஒனறு.

1887–ல் அக்டோபர் 14–ம் நாள் கர்னூலில் பிறந்த டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார் அவர்கள், 89 ஆண்டுகள் இந்நிலவுலகில் வாழ்ந்து, செயல் வீரராகத் திகழ்ந்து நம்மைவிட்டு மறைந்தார். அவர் உருவம் கறுப்பு; அவரது உள்ளம் வெளுப்பு. அவரது இழப்பு குறிப்பாகத் தமிழகத்திற்கும் பொதுவாக இந்தியாவிற்கும் ஒரு பேரிழப்பாகும்.