பக்கம்:எனது நண்பர்கள்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  129

பெரிய கொடையாளி என வாழ்ந்து வந்தவர். அவரது தன்னலமற்ற தொண்டு இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பரவியுள்ளது. அவரது நாட்டுப்பற்றும், இனப்பற்றும், மொழிப் பற்றும் பாராட்டக்கூடியது மட்டுமல்ல, ஒவ்வொருவராலும் பின்பற்றக் கூடியதும் ஆகும.

அன்னியராக ஆளவந்த போர்த்துக்கேசியருடன் அரசுரிமைக்குப் போராடிய பாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியரசன் இராசதானி விற்றிருந்த நல்லூர் நகரம் கைப்பற்றப்பட்டதும், அம்மன்னன் இறுதியில் விரைந்து கோட்டை கட்டி ஆண்ட நகரமும் கோப்பாய். திரு வன்னிய சிங்கம் அவர்களை முதல் உறுப்பினராகத் தெரிந்தெடுத்ததும் கோப்பாய். அவருக்குப் பெண் வழங்கியதும் கோப்பாய். அதனால் அவர் இயல்பாகவே கோப்பாய் கோமகனானார்.

1947–இல் நடந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக முன்பு வெற்றி பெற்றதும் கோப்பாய் தொகுதியே. அந்த வெற்றி அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து அவர் அமரராகும் வரைக்கும் 12 ஆண்டுகள் பாராளுமன்றத்தில், நாடு, மொழி, இன நலம் கருதி முழக்கிய உரிமை முழக்கம் இன்றும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் நாள் தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள். அன்றுதான் மாவிட்டபுரத்தில் தமிழ்க்கடவுளான முருகன் முன்னிலையில், மும்மூர்த்திகள், தலைவர் செல்வநாயம், அறிஞர் நாகநாதன், அன்பர் வன்னியசிங்கம் ஆகியோரால் நடாத்தப்பெற்ற ஒரு பொதுக் கூட்டமே, தமிழரசுக் கட்சி தோன்றுவதற்கு மூலமாக அமைந்தது. திரு வன்னியசிங்கம் இல்லாவிடில் தமிழரசுக்கட்சி தோன்றியிருக்கவும் முடியாது. இந்த அளவு வளர்ந்திருக்கவும்

எ. ந.—9