பக்கம்:எனது நண்பர்கள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கி. ஆ. பெ. விசுவநாதம்  27

பெறச் செய்தற்கு முதற்காரனமாயிருந்து என்னைத் தூண்டியவரும் திரு. வி. க. அவர்களேயாவார்.

திரு. வி. க. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள தன்னுடைய வரலாற்று நூலில் என்னைப்பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அது அவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்திருக்கிறது.

பிறகு வயது முதிர்ந்து, நடைதளர்ந்து, கண்பார்வை குறைந்து, செயல் இழந்து, அவரது இல்லத்தில் இருக்கும் பொழுது பலமுறை சென்று அவர்களைப் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு தடவையும் அவரைப் பார்க்கும்பொழுது டாக்டர் மு. வ. அவர்களையும் அங்குக் கண்டு மகிழ்வேன். டாக்டர். மு. வ. தமிழ்த் தென்றலைத் தன் தலைவராகவும் தனது ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்தவர். அதுமட்டுமல்ல; இறுதிக் காலத்தில் அவரருகில் இருந்து அவருக்குத் தொண்டும் புரிந்து வந்தவர்.

ஒரு தடவை நான் திரு. வி. க. அவர்களிடம் சென்ற பொழுது, டாக்டர் மு. வ. என்னிடம் கூறினார். “ஐயா அவர்கள் இப்பொழுதும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள் என்றும், அந்நூலுக்கு “படுக்கைப் பிதற்றல்” என்று பெயர் வைத்து ‘உலகை நோக்குமின்’ என்று தொடங்கப் பெற்றிருக்கிறது” என்றும் கூறினார்கள்.

தமிழ்ப் புலவர்கள் தமிழகத்திலிருந்து தமிழ் மக்களுக்கென எந்த இலக்கியங்களைச் செய்தாலும், அந்நூல்களுல் முதற் பாட்டில் முதலடியில் முதற் சொல்லாக உலகத்தை வைத்துச் செய்யும் ஒரு மரபை திரு. வி. க. அவர்களின் படுக்கைப் பிதற்றலிலும் கண்டு வியந்தேன்.

மற்றொரு முறை காணச் சென்றபொழுது கூனிக் குறுகித் தரையில் முடங்கிக் கிடந்தார்கள். அப்பொழுதும் டாக்டர் மு. வ. அவர்களை அங்குக் கண்டேன். ‘‘காலமெல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/28&oldid=986304" இலிருந்து மீள்விக்கப்பட்டது