பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


முதலாளிகள் என்னை நெருங்கினார்கள். வானளாவப் புகழ்ந்தார்கள். தைரியம் கூறினார்கள். “நீதான் நடிக்க வேண்டும்” என்றார்கள். நான், “எனக்குக் கொஞ்சம் கூடப் பாடமில்லையே” என்றேன்.

வள்ளியின் பாடல்களையெல்லாம் நான் அடிக்கடிசின்னண்ணாவுடன் போட்டி போட்டுப் பாடிக் கொண்டிருப்பது என் தந்தையாருக்குத் தெரியும். அவர் என் அருகில் வந்து,

“டே, பயலே! சும்மா போடுடா. நான் பின்னலேநிண்ணா பாடிட்றேன்” என்றார்.

மந்திரம் ஒதினார்

பாடம் சொல்லித் தருவதாகச் சிலர் உற்சாகப் படுத்தி -னார்கள். நான் தயங்கிக் கொண்டே நின்றேன். முதலாளிகளில் ஒருவரான கருப்பையாப்பிள்ளை என்னை ஒருபுறமாகத் துாக்கிக் கொண்டு போனார், காதில் ஒரு மந்திரத்தைச் சொன்னார். அவ்வளவுதான்; நான் நடிப்பதாக ஒப்புக் கொண்டேன்.

நாடகம் நடந்தது. நான் வள்ளியாக நடித்தேன். உளறிக் ’கொட்டாமல் ஒழுங்காகவே நடித்தேன். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். என்னை நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளச் செய்த அந்த மந்திரம்...! முதலாளி கருப்பையா பிள்ளை என் காதில் ஒதிய அந்த மந்திரம்-என்ன தெரியுமா?

“டே பயலே! நீ இன்னிக்கு வள்ளியாக நடிச்சா உனக்கு முழுசா அஞ்சு ரூபாய் இளும் தருகிறேன்” என்பதுதான்.

முதலாளி கருப்பையாபிள்ளை என் காதில் சொன்ன ஐந்து ரூபாய் ரகசியம் நாடகம் முடியுமுன் நடிகர்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. பலர் என்னைப் பார்த்து கேலி செய்யத் தொடங்கினார்கள். அஞ்சு ரூபாய் வள்ளி: அஞ்சு ரூபாய் வள்ளி’ என்று என் காதில் விழும்படிக் கிண்டல் செய்தார்கள். நான் அவற்றையெல்லாம் இலட்சியம் செய்யவேயில்லை. நாடகம் முடிந்ததும் எனக்கு ஐந்து ரூபாய்கள் கொடுத்தார் முதலாளி கருப்பையா பிள்ளை.