பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


பார்க்கப்பட்டது. நாங்கள் அந்த அந்த வீட்டில் குடியேறியதும் பாவலரும் கம்பெனி வீட்டை மாற்றிக்கொண்டு ஆனைக் கவுணிக்கே வந்துவிட்டார். எங்களை அதிக தூரத்தில் தங்கவிடக் கூடாதென்பது அவர் எண்ணம்போல் தோன்றியது.

மனோஹரா

ஆனைக்கவுணி வீட்டுக்கு வந்ததும் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ‘மனோஹரா’ நாடகம் பாடம் கொடுக்கப்பெற்றது. எனக்கு மனேஹரன் பாடமும் சின்னண்ணாவுக்கு வசந்தசேன பாடமும் கொடுத்தார்கள். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்றது. பாவலர் மிகச்சிறந்த முறையில் எனக்கு நடிப்புப் பயிற்சியளித்தார். அவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சென்னை சுகுண விலாச சபையில் சில காலம் நடிகராக இருந்தவர். முதலியாரவர்கள் மனேஹரனாக நடித்தபோது பாவலர் ராஜப்பிரியனாக நடித்திருக்கிறார்.

மனோஹரா ஒத்திகை நடந்துகொண்டிருக்கும் பொழுதே சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகம் பாடம் கொடுக்கப் பெற்று அரங்கேறியது. அந்நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்த பாவலர் என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார். மனோஹரன் நாடகத்திற்கு மிகப் பெரிய சுவரொட்டிகள் அச்சிட்டு, சென்னை நகரெங்கும் ஒட்டச் செய்தார். பிரமாதமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. முதல் நாடகத்திற்கு மனோஹரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையே தலைமை தாங்கச் செய்தார். தொடர்ந்து ஒத்திகை நடைபெற்று வந்ததால் நாடகத்தன்று எனக்குத் தொண்டை கட்டிக்கொண்டது. பாவலர் என்னைத் தட்டிக் கொடுத்துப் பயப்படாமல் நடிக்கச் சொன்னார்.

நாங்கள் வேடம் புனைந்து கொண்டிருக்கும்பொழுது பம்மல் சம்பந்த முதலியார் அவர்களையும் அவருடன் கதாநாயகியாக நடிக்கும் திரு. ரங்கவடிவேலு முதலியாரையும் பாவலர் உள்ளே அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். நாங்கள் பெருமகிழ்ச்சி யடைந்தோம். எனக்கும், அன்று விஜயாளாக வேடம் புனைந்த தருமலிங்கத்திற்கும் ரங்கவடிவேலு முதலியார் பக்கத்தில் நின்று ஒப்பனை செய்வதில் உதவி புரிந்தார்.