பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


அவரது நினைவு மாறாதிருக்கவே இந்தப் படத்தை எதிரே வைத்திருக்கிறேன். நானறிந்தவரையில் இவர் ஒருவர்தான் குடிக்காத நடிகர்” என்று கூறினார்.

பிறகு, கல்யாணராமையர் நாடகக் குழுவின் சிறப்பையும், அந்தக் குழுவில் நடிகர்களாக இருந்த ராமுடு ஐயர், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் பெருமையையும்பற்றி நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். சிறுவர்களாக இருந்ததால், அவருடைய நீண்ட பேச்சு எங்களுக்கு அலுத்துப் போய்விட்டது. பிறகு, தம் சமஸ்தானத்தின் வெளியீடாக அச்சிட்ட கல்யாணராமையரின் பாமா விஜயம், லதாங்கி ஆகிய இரு நாடகங்களையும் கொண்டு வரச் சொல்லி, என் கையில் ஒரு பிரதியும் சின்னண்ணா கையில் ஒரு பிரதியும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

மனோஹரனுக்குச் சிறப்பு

அன்றிரவு அரசரின் அரண்மனை அரங்கில் மனோஹரா நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. அரசரும், அவரது இகளய புதல்வர் காசி மகாராஜாவும், மற்றும் சில அதிகாரிகளும் மட்டும் கூடியிருந்தார்கள். அவர்களுக்குப் பின்புறம் அந்தப்புரப் பெண்கள் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால், எங்களுக்குத் தெரியவில்லை. பத்துப் பதினைந்து பேர் முன்னிலையில் நாடகத்தை நடிப்பது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அன்று எனக்கும் சின்னண்ணாவுக்கும் மிகப் பெரிய பதக்கங்கள் பரிசளிக்கப் பட்டன. ஒவ்வொரு பதக்கமும் ஆறு பவுனில் செய்யப்பட்டிருந்ததாகச் சொன்னார்கள். காட்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது இடையே என்னை அழைத்தார்கள். நான் போய் வணங்கி நின்றேன். காசி மகாராஜா தமது புதல்வரின் கழுத்திலிருந்த ஒரு வைரம் பதித்த சங்கிலியைக் கழற்றி என் கழுத்தில் போட்டார். அப்படியே சின்னண்ணாவுக்கும் ஒருதங்கச்சங்கிலி பரிசு கிடைத்தது. மற்றும் பலநடிகர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்கள். நாடகம் முடிந்து, வீடு திரும்பினோம்.

மறுநாள்காலை மீண்டும் அரசர் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். முதல் நாள் அரசர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகிலேயே ஒரு சிறிய நாடக அரங்கு இருந்தது. மனோஹரன்