பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199


தம்மோடு வர அழைத்திருந்தார்கள்.ஆனால் அவருக்குக் கம்பெனியின் மீது இருந்த பற்றுதல், நன்றியுணர்ச்சி, அவர்களோடு போகவிடாது தடுத்து விட்டன. அவர் என்னிடம் இந்த உண்மையைக் கூறியபோது, நான் அவரை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டேன். அவர்தான் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்.

முக்கிய நடிகர்கள் பலர் போய்விட்டதால் பொள்ளாச்சியில் நாடகங்களைத் துவக்க இயலாமல் சிரமப்பட்டோம். பதினைந்து நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. சில்லரை வேடங்களைப் புனைந்து வந்த பல நடிகர்களுக்கு நல்ல வேடங்களைத் தாங்கச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. புதிதாகச் சில நடிகர்கள் சேர்க்கப் பட்டனார். எப்படியோ ஒருவாறாக நாடகம் மீண்டும் துவங்கியது. இந்த நிலையில் வசூலை எதிர்ப்பார்க்க முடியுமா? மிகவும் கஷ்டப் பட்டோம்.

காலவ ரிஷி

பொள்ளாச்சியில் இந்தக் கஷ்டத்திலும் புதிய நாடகமாக, பம்மல் சம்பந்தனரின் காலவரிஷி தயாராயிற்று. அந்நாடக அரங்கேற்றத்தன்று வேடிக்கையான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

காலவரிஷி நாடகம் தொடங்கி நடந்துகொண்டிருந்தது. காலவ முனிவர் ஆற்றின் நடுவே நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மண்டு, கமண்டு என்னும் இரு சீடர்கள். அவர்களும் கரையருகே கண்களை மூடியவண்ணம் வீற்றிருக்கிறார்கள்.

திரை உருண்டு உயர்ந்ததும், சித்திரசேனன் என்னும் கந்தர்வன் ஊர்வசி சமேதனாய் உல்லாசத்துடன் விமானத்தில் பறந்து வருகிறான். விமானம் ஆற்றைக் கடந்து செல்லும்போது தன்வாயிலிருந்த தாம்பூலத்தைக் கீழே உமிழ்கிறான். அது ஆற்றில் கண்களை மூடிக் கைகளை நீட்டி நிஷ்டையிலிருந்த காலவ முனிவரின் வலதுகரத்தில் விழுகிறது. கரத்தில் ஏதோ விழுந்துநிஷ்டை கலைக்கப்பட்டதும் காலவர் நாற்புறமும் பார்க்கிறார். சினத்துடன் சிஷ்யர்களை அழைக்கிறார். பிறகு ஞான திருஷ்டியால், உண்மையறிந்து, ஏதோ சபதம் செய்கிறார். இதன் காரணமாக, கிருஷ்ணுர்ஜுன யுத்தம் நடக்கிறது. இதுதான் நாடகக் கதை.