பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223


கஜன், தம் உடல் வலிமையில் நம்பிக்கை வைத்து, ஹாஸ்ய நடிகரான தொந்தி செட்டியை அலாக்காக மேலே தூக்கிக் கீழே போட்டு உருட்ட எண்ணினார். அதற்கு முன் கடோற்கஜனுக நடித்தவர்கள் யாரும் அப்படிச் செய்ததில்லை. அந்தக் காட்சியில் மேடைக்கு வரும்போது கடோற்கஜன் என்னிடம் இந்த ஆசையை வெளியிட்டார். நான் சிரித்துக் கொண்டே, “முடிந்தால் செய்யுங்கள். அதிலொன்றும் தவறில்லை. வேடிக்கையாகத் தானிருக்கும்” என்று கூறினேன்.

கடோற்கஜன் வீழ்ந்தார்

காட்சி நடைபெற்றது. சண்டை துவங்கியது. கடோற்கஜன் தொந்தி செட்டியைத் தூக்க முயன்றார். எதிர்பாராத நிலையில் தொந்தி செட்டி லாவகமாக விலகிக் கொண்டார். அத்தோடு நிற்கவில்லை. கடோற்கஜனின் வலது கையைப் பிடித்து அப்படியே அவரை முதுகில் தூக்கித் தடாரென்று கீழே மல்லாந்து விழச் செய்தார். எல்லாம் இமைகொட்டும் நேரத்தில் நடந்து விட்டது. கடோற்கஜன் கீழே பரிதாபமாகக் கிடக்கிறார். தோல்வியடைய வேண்டிய தொந்திசெட்டி, வெற்றிப் பெருமிதத்தோடு, “தொந்திசெட்டியைத் தூக்கவா பார்க்கிறாய்?” என்று கூறி நகைக்கிறார். அபிமன்யுவாக நின்ற எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சபையில் ஒரே கரகோஷம்.

தொந்திசெட்டியாக நடித்தவர் என். எஸ். கிருஷ்ணன். அவர் ஒல்லியான சரீரமுடையவர். ஆனால் கொஞ்சம் குஸ்தி முறைகளெல்லாம் தெரிந்தவர். நல்ல துணிச்சல் பேர்வழி. அவர் மலை போன்ற சரீரத்தைத் தூக்கியடித்தது எல்லோருக்கும் பெரு வியப்பை அளித்தது. மேடையில் நின்ற எனக்கும் அரவானுக்கும் . சிரிப்புத் தாங்கவில்லை. தொந்தி செட்டி தம்மைத் துாக்க முடியுமெனக் கனவிலும் கருதாத புதிய இளைஞர் கடோற்கஜன் அசட்டுச் சிரிப்புடன் எழுந்து நின்றார். அன்று அவ்வாறு திண்டாடித் திணறிய கடோற்கஜன் மலை வேறு யாருமல்ல. நமது புளிமூட்டை ராமசாமியே!