பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298


அப்பப்பா! பாடல்களுக்கு மெட்டு போடும் விஷயமாக ஏற்பட்ட தகராறு இருக்கிறதே, அதற்கே ஒரு தனி அத்தியாயம் எழுத வேண்டும். எவ்வளவு ரசமான விஷயம்! பாட்டு வாத்தியார் பூமிபாலகதாஸ் பெரும் புலவர். அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பாட்டுக்கு மெட்டு அமைப்பதா, மெட்டுக்குப் பாட்டு அமைப்பதா என்று நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. கடைசியாக மெட்டுக்கே பாட்டு அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். புலவர் பூமிபாலகதாஸ் கொஞ்சம் சிரமபட்டார். சின்னண்ணா தான் சங்கீத டைரக்டர். தமிழிலேயுள்ள இசைப் பாடல்களைப்போல் ஒரு வரம்புக்குள் அடங்காத இந்தி மெட்டுகளிலே எதுகை மோனை முதலிய இலக்கண விதிகளுக்கு உட்பட்டுப் பாடல்கள் புனைவதென்றால் எளிதான காரியமா? அதிலும் இசைப்பயிற்சியில்லாத புலவர் என்ன செய்வார்? இந்தத் தொந்தரவுகளிலெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் என். எஸ். கிருஷ்ணன் அவர் பாத்திரத்துக்குரிய இரண்டு பாடல்களையும் அவரே போட்டுக் கொண்டார். எனக்குரிய மூன்று பாடல்களையும் நானே புலவருடன் இருந்து புனைந்து வாங்கிக்கொண்டேன்.

தாசி கமலமாக நடிக்க வந்திருந்த அம்மையார், அவர் பாடவேண்டிய பாட்டிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தகராறு செய்யத் தொடங்கினார்.

ஆசை யென்பது அளவு மீறியே
ஆஹா வெகு மோகமானேன்
அணைய வாரும் துரையே கீரும்

என்பது அவரது பாட்டின் முதலடி. இதில் ‘அணைய வாரும் துரையே’ என்ற வரியைப் பாட முடியாதென்று அம்மையார் மறுத்துவிட்டார். பாட்டு வாத்தியாரோ அந்தவரியை மாற்றவே முடியாதென்று கூறி விட்டார். தகராறு முற்றியது. கடைசியில் சின்னண்ணா அவர்கள் ‘அணைய வாரும் துரையே’ என்பதை ‘அருகில் வாரும் துரையே’ என்று மாற்றிக்கொடுத்தார். இதைப் போன்ற சில சிக்கல்களுக்கிடையே பாட்டுப் போடும் படலம் முடிந்தது.