பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310


அம்மையாரும் அவரது சகோதரிகளும் ஆரம்ப முதலே ராஜா வோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட வினை இது. ஆனால் உண்மையை யுணர்ந்ததும் ராஜா சிறிதும் தகராறு செய்யவில்லை. அவரல்லவா பெரிய மனிதர்! உடனே;

“அடடே, அப்படியா? இதை அப்பவே சொல்லியிருக்கலாமே. சரிடா கிருஷ்ணா, இந்த சீன மறுபடியும் எடுக்கிறேன். ஒன் இஷ்டம்போல் ஆக்டு செய்”

என்று சொல்லிவிட்டு மீண்டும் கேமரா அருகில் சென்றார் .

ராஜாவின் தனிச்சிறப்பு

இதுதான் ராஜாவிடமுள்ள தனிப் பெருங்குணம், ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்னும் வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமாக விளங்கியவர் ராஜா. தவறு என்று உணர்ந்தால் உடனே அதைத் திருத்திக் கொள்ளத் தயங்கமாட்டார். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால்’ என்று சாதிக்கும் பிடிவாதக் குணம் அவரிடம் இல்லை. ஒருநாள் ஸ்டுடியோவில் ஒருவரோடு பிரமாதமான சண்டை நடக்கும். மறுநாள் அதே மனிதரோடு ராஜா களிப்புடன் பேசிக் கொண்டிருப்பதைக் காணலாம். பழகுபவர் எவரையும் உரிமை பாராட்டி ஒருமைப்பதங்களால் அழைப்பது ராஜாவின் இயற்கை குணம். புதிதாகப்பழகுபவர்கள். இதைத் தவறாக எண்ணவுங் கூடும். ஆனால் மற்றவர்களின் விருப்பையோ வெறுப்பையோ ராஜா பொருட்படுத்து வதில்லை.

அந்தக்காலத்தில் பிரபல நடிகர்களாக விளங்கிய பில்லி மோரியா ஈஸ்வர்லால், ஜால்மார்ச்செண்ட், கோஹர், சுலோசன முதலியோர் எங்கள் மேனகா படப் பிடிப்பைப் பார்க்க வருவார்கள். அவர்களிடம் ராஜா,

“பார்த்தீர்களா, உங்கள் தமிழ்நாட்டு இளங் குழந்தைகளின் திறமையை? இன்னும் இரண்டொருபடங்களில் நடித்தால் உங்களையெல்லாம் தோற்கடித்துவிடுவார்கள்.”

என்று பெருமையோடு கூறுவார்.