பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

395


எண்ணினேன். நான்பெற்ற அரிய பேற்றினை எண்ணி யெண்ணிப் பெருமிதம் அடைந்தேன். நாடகத்திற்கு வசூலாகவில்லை. என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் ஒளவையாராக நடித்தபின் எனக்கு ஆன்மீக நிறைவு ஏற்பட்டது. மக்களின் வரவேற்புக்குரிய நாடகங்களையே நடிப்பது எங்கள் குறிக்கோள் அன்று. மக்களுக்கு எதைச் சொல்ல வேண்டும் என்று எண்ணாகிறோமோ, எது தேவையென்று நினைக்கிறோமோ அத்தகைய நாடகங்களையே இது வரை நடித்து வந்திருக்கிறோம். அவ்வாறு நடிக்கப்பெறும் நல்ல நாடகங்களுக்குப் பொது மக்களின் வரவேற்பினைப்பெற்றுத் தர அறிஞர்களின் ஆதரவும் பத்திரிகைகளின் பாராட்டுரைகளும் எங்களுக்கு மிகவும் உதவியிருக்கின்றன. குமாஸ்தாவின் பெண்ணைத் தொடங்கிய நாளில் போதுமான ஆதரவில்லை. ஆனால், மதுரையில் அமோகமான வரவேற்புக் கிடைத்தது. அஃதே போன்று ஒளவை யாருக்கும் ஆதரவு கிடைக்குமென்று உறுதியாக நம்பினோம்.

ஒளவையாரைப் பார்த்த புலவர் நல்லசிவன் பிள்ளை “நாடகக்கலைக்கு நல்ல காலம் பிறந்தது” என்று எழுதினார். “நீங்கள் கூத்தாடிகள் அல்ல; மாபெருங் கலைஞர்கள்,” என்று மதுரைச் சங்கப் புலவர் நா. கிருஷ்ணசாமி நாயுடு பாராட்டியிருந்தார். உற்சாகம் எங்களை ஊக்கியது. மதுரையில் நாடகம் தொடங்கி ஏறத்தாழ ஒராண்டு முடிந்தது. மேலும் சில புதியநாடகங்களைத் தயாரித்து, மதுரையம் பதியிலேயே அரங்கேற்ற எண்ணினோம். அதற்குள் உலகில் போர்ச் சூழல் உருவாகிவிட்டது.