பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

447


பாகவதர் பேச்சுக்குப் பின் ஈரோடு நகரசபைத் தலைவர் திரு. ஆர். கே. வேங்கடசாமி எல்லோரையும் வரவேற்றார் . அவரது வரவேற்புரையில் ஒரு பகுதி,

“அன்பர்களே, இவ்வளவு காலமும் இல்லாமல் இப்பொழுது ஈரோட்டிலுள்ள சில பெரிய மனிதர்களுக்கு நாடகக் கலை அபிவிருத்தியைப் பற்றி என்ன அக்கரை வந்தது? இதில் உள்ளூர ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோவெனச் சிலர் நினைக்கக் கூடும். எவ்விதச் சூழ்ச்சியுமில்லை, தந்திரமும் இல்லையென்று நான் உறுதியாகக் கூறுவேன். சென்ற ஏழெட்டு மாத காலமாக டி. கே. எஸ், சகோதரர்களின் நாடகங்களை இந்நகரில் பார்த்தபின் நாடகக் கலையின் மேன்மையும் அது மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கையும் அதனால் ஏற்படும் பயனையும் ஒருவாறு நன்குணர்ந்தோம். அதன் காரணமாக இக் கலையை நல்ல முறையில் போற்றி வளர்ப்பதற்குத் தமிழ் நாட்டிலுள்ள அறிஞர்களையெல்லாம் ஒருங்கு கூட்டி யோசிக்கவும், இயலுமானால் உருப்படியான திட்டங்கள் வகுக்கவும் முடிவு செய்தோம். அதற்கிணங்க, கலை வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவென்ற முறையில் பல்வேறு கொள்கையுடையவர்களும் ஒன்று சேர்ந்து, தொழில் நடத்தும் கம்பெனியாரின் பூரண ஒத்துழைப்பையும் பெற்றதால் இன்று மகாநாடு நடைபெறுகிறதேயன்றி, தனிப் பட்ட சிலருடைய பெருமைக்கோ, புகழுக்கோ அல்லவென்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாடகக் கலை அபிவிருத்தி மகாநாடு முதல் முதலாக இந்நகரில் கூட்டப்பட்டது இந்நகருக்கும் நகரமக்களுடைய கலையுணர்ச்சிக்கும் பெருமை யளிப்பதாக நான் கருதுகிறேன்.”

வரவேற்புரை முடிந்த பிறகு தலைவர் ஆர். கே. சண்முகம் அவர்களுக்கும் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களுக்கும் ஈரோடு நகர சபையின் சார்பில் வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுக்கப்பட்டது. நாடகத் துறையில் ஈடுபட்டுள்ள பெரு மகனார் ஒருவருக்கு நகர சபையின் சார்பில் வரவேற்புப் பத்திரம் அளித்தது இதுவே முதல் தடவையென்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த வகையில் ஈரோடு நகரசபை மற்ற நகர சபைகளுக்கு வழிகாட்டியாக நின்றதுபோற்றுதற்குரிய ஒன்றாகும்.