பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

467


வந்து வாளை வீசுதல் ஆகிய காட்சிகளை யாமினியின் படுக்கை அறையில் மெளன நாடகங்களாக மெல்லிய திரையுள்ளே நடித்துக் காட்டச் செய்தோம். ஒவ்வொரு காட்சி மாறும்போதும் சபையோர் ஆரவாரத்தோடு கரகோஷம் செய்தனார்!

திரைப்படத் துறை வரவேற்றது

ஏ. எஸ். ஏ. சாமியின் உரையாடல்கள் நன்றாக இருப்பதாகவும், உடனே வந்து நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்றும் ஜூபிடர் பிக்சர்ஸ் சகோதரர் சோமுவுக்குக் கடிதம் எழுதினேன். அவரும் தந்தி கொடுத்துவிட்டு மறுநாளே வந்தார். நாடகத்தைப் பார்த்தார். சாமியைச் சந்தித்தார். ஆறு படங்களுக்கு வசனம் எழுத உடனே ஒப்பந்தம் செய்தார். பில்ஹணன் 15 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் சென்னைக்குச் செல்லச் சித்தமானார் ஏ. எஸ். ஏ. சாமி. சாமியை அன்போடு ஆதரித்துத் திரையுலகில் முன்னுக்குக் கொண்டு வரவேண்டு மென்று கலைவாணருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினேன். சென்னை சென்ற ஒரு வாரத்திற்குப்பின் சாமியிடமிருந்து கடிதம் வந்தது. கலைவாணர் தனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துவருவதாக எழுதியிருந்தார். திரைப் படத் துறையில் பணிபுரிய பல ஆண்டுகளாக முயன்று, பின் அம் முயற்சியையே கைவிட்டவர் ஏ. எஸ். ஏ. சாமி. இப்போது பில்ஹணன் நாடகத்தின் மூலம் அவரை இருகரம் கூப்பி வர வேற்றுக் கொண்டது திரைப்படத் துறை. ஈரோட்டை விட்டு சகோதரர் சாமி சென்னைக்குப் புறப்பட்டபோது அவரை மனதார வாழ்த்தி வழியனுப்பினேன்.

சம்பூர்ண இராமாயணமும் சாத்வீக மறியலும்

நாடகக் கலை மாநாடுவரை எங்களிடம் நட்பும் பாசமும் வைத்திருந்தார் பெரியார் ஈ. வே. ரா. அவர்கள். மாநாடு குழப்பம் எதுவுமின்றி நல்ல முறையில் நடந்தபின், அந்தப் பாசமும் பரிவும் சிறிது குறைவதுபோல் தோன்றியது. நான் அச்சகத்திற்கு அடிக்கடி செல்வேன். பெரியார் முன்போல் கலகலப்பாகப் பேசுவது இல்லை. எங்கள் மேல் ஏதோ சிறிது கோபமிருப்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனாலும் அதனைப் புலப்படுத்திக் கொள்ளாமல் வழக்கம் போல் அன்பாகவே பழகி வந்தேன்.