பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சங்கரதாஸ் சுவாமிகள்

அந்தநாளில் தமிழ் நாடக உலகில் சுவாமிகள்’ என்றாலே போதும், அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்தில் இருந்த மிகப் பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர், சித்திரக்கவி சுப்பராய முதலியார், ஏகை சிவசண்முகம் பிள்ளை, குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலைவணங்கிப் பாராட்டினார்கள்.

நடிகர்கள் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் சுவாமிகள் மிகவும் அக்கறையுடையவராக இருந்தார். வெற்றிலை போடுவது, பொடி போடுவது, பீடி சிகரெட் முதலிய லாகிரிப் பொருட்களை உபயோகிப்பது இவை யெல்லாம் சுவாமிகளுக்குப் பிடிக்காது. நடிகர்கள் யாராவது இவற்றை உபயோகிப்பதாகத் தெரிந்தால் அவன் பாடு தீர்ந்தது. பிறகு யார் தடுத்தாலும் பயனில்லை; பயங்கரமான அடி விழும். சுவாமிகளின் இந்த அடிக்குப் பயந்து கம்பெனியை விட்டு ஓடிய நடிகர்கள் பலருண்டு.

சுவாமிகள் தாமே நடிப்புச் சொல்லிக் கொடுப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எமதருமன், இரணியன், கடோற் கஜன் முதலிய வேடங்களுக்கு அவரேதாம் நடிப்புப் பயிற்சி அளிப்பார். கம்பீரமான அவரது குரல் வெண்கல நாதம்போல் ஒலிக்கும்.

ஒரே நாளிரவில் ஒரு நாடகம் முழுவதையும் கற்பனையாக எழுதி முடிக்கும் மகத்தான ஆற்றல் சுவாமிகளுக்கு இருந்தது. இது வெறும் புகழ்ச்சியன்று; என் கண்கண்ட உண்மை.