பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலு;— அடடா, இன்றையக் கூட்டத்தில் உன் அண்ணா பேசியிருக்கிறார் பார். அதைப்பற்றி என்ன அபிப்பிராயம்சொல்வதென்றே எனக்கு விளங்கவில்லை.

லீலா;— தாங்கள் முழுமையும் கேட்டீர்களா? அடடா; நான் கேட்கமுடியாமல் போய்விட்டதே: எதைப்பற்றிப் பேசினார்? என்னென்ன பேசினார்?

பாலு;— பால்ய விவாகத்தின் தீமைகளைப் பற்றியும், காதல் மணம், மறுமணம் இவற்றின் அவசியத்தைப் பற்றியும் அழகாகப் பேசினார். இன்னும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, அடிமை வாழ்வின் கேவலநிலை; சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம், பெண்கள் முன்னேற்றம், விபசாரத்தின் இழிவுத்தன்மை, தற்காலக்கல்வி முறையின் சீர்கேடு, கைத் தொழில், கிராம முன்னேற்றம் அடடா, இனிமேல் சொல்ல வேண்டியது என்பதாக ஒன்றும் பாக்கியில்லை. அப்பப்பா! என்ன கம்பீரமான பேச்சு, உயர்ந்த உபமானங்கள்; ஆணித் தரமான எடுத்துக்காட்டுகள்; ஒவ்வொரு வார்த்தைக்கும் சபையில் கரகோஷமும் ஆரவாரமும்தான். உன் அண்ணாவும் இவ்வளவு உயர்வாகப் பேசுவாரென்று நான் எதிர் பார்க்கவேயில்லை. எனக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது, போயேன்!

இந்த உரையாடலில் அண்ணா என்ற சொல் வரும் நேரத்தில் சபையில் பெருத்த கைத்தட்டல் ஏற்பட்டது. ஒரே ஆரவாரம்! இதைச் சொல்பவர் எஸ்.எஸ். இராஜேந்திரன். அவர் ஏற்கனவே அறிஞர் அண்ணா முதலியவர்களோடு தொடர்பு கொண்டவர். கேட்க வேண்டுமா? மாநாடு நடைபெற்ற இரண்டு நாட்களிலும் இந்தக் காட்சியில் மக்களின் பாராட்டு அதிகமாக இருந்தது.

அந்தமான் கைதி 1938 இல் எழுதப்பெற்ற நாடகம்! நாங்கள் அதனை நடிக்குமுன்பே அமைச்சூர் சபையினரால் நான்கு முறை நடிக்கப் பெற்றுள்ளது. எங்கள் குழுவில் நடிக்கப்பட்டப் பின் நாடகம் மகத்தான வெற்றி பெற்றது.

எ. நா—32