பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முள்ளில் ரோஜா

அந்தமான் கைதியில் எனக்குக் கிடைத்த ஓய்வை நான் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு முழங் காலுக்குக் கீழே ஒரு கழலை இருந்தது, அதனல் வலியோ வேறு தொந்தரவோ இல்லையென்றாலும் ஒரு சிறுகட்டிபோல் இருந்தது ஒருநாள் எங்கள் நண்பர் டாக்டர் பாலு அதைப் பார்த்தார். “இதைச் சுலபமாக எடுத்துவிடலாமே ஒரு வாரம் ஓய்விருந்தால்போதும்” என்றார். அந்தமான்கைதி அரங்கேறிய மறுவாரம் நான் டாக்டர் பாலுவிடம் அந்தக் கழலைக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அப்போது தென்னுாரில் ஒரு தனி வீட்டில் தங்கியிருந்தேன்.

திரைப்பட இயக்குகர் ப. நீலகண்டன்

திருச்சியில் சிவலிலா வெற்றியோடு நடைபெற்றபோதுபுதுக் கோட்டை கலைவாணி ஆசிரியர் ப. நீலகண்டன் அவர்கள் 5-1-45 இல் சிவலீலா பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் நானும் அவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திரைப்படத் துறையில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. “ஏதாவது ஒரு நாடகம் எழுதிக்கொடுங்கள். அதன் மூலம் திரைப்படத் துறை தங்களைத் தானாக வரவேற்கும்” என்று கூறினேன். ஏற்கனவே அவர் ‘தாசிப்பெண்’ என்னும் பெயரில் ஒரு குறுநாவல் எழுதியிருந்தார். அதை நான் முன்பே படித்திருந்தேன். அதையே நாடகமாக்கலாம் என்று கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார். “என்னுடன் கூடவேயிருந்து நாடகம் எழுதினால் நன்றாக அமையலாம். அப்படி எழுதத் தங்களுக்கு வசதி படுமா?” எனக் கேட்டேன். அவரும் அதையே விரும்பினார். கு. சா. கி. யும் ப. நீ. யும் நெருங்கிய நண்பர்கள். ‘அந்தமான் கைதி’ நாடகத்