பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


தாமோதரராவ் சங்கிலி யறுக்கும் காட்சியில் அவர் நடிப்பதைப் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும். பழம்பெறும் நடிகர்களிலே ஒருவர் அவர்.

என் தந்தையார் நடிகராகக் கலந்து கொண்டது கடைசியாக அந்தக் கோவலன் நாடகத்தில்தான். அதன்பிறகு நடிக்கும் சந்தர்ப்பம் அவர் வாழ்க்கையில் ஏற்படவே இல்லை. பின்பாட்டுக் காரராகவே இறுதி வரையும் வாழ்ந்தார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபையின் நாடகங்கள் மதுரையில் தொடர்ந்து ஒரு மாதகாலம் நடைபெற்றன. பவளக் கொடி, சதியனு சூயா, சுலோசன சதி, சீமந்தனி, பிரகலாதன், கோவலன், பார்வதி கல்யாணம் முதலிய நாடகங்களெல்லாம் நடிக்கப் பெற்றன. சிறுவர்கள் நடிக்கும் நாடகம் ஆனதால் சிறந்த வரவேற்பைப் பெற்றனவென்றே சொல்லவேண்டும்.

தங்கப் பதக்கம் பரிசு

அடுத்த ஊர் விருதுப்பட்டி ஆம், விருதுப்பட்டிதான்; நமது தலைவர் திரு. காமராசர் அவர்கள் பிறந்த ஊர்தான். விருதுநகர் என்ற பெயர் அப்போது இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஏற்பட்டது. விருதுப்பட்டியை நான் மறக்க முடியாது. அங்குதான் 1936 இல் மனிதகுல மாணிக்கம் பண்டித நேரு அவர்களைத் தரிசித்தேன். வீராங்கனையாக இன்று விளங்கும் திருமதி இந்திரா அவர்களை இளம்பருவத்திலே கண்ட இடமும் விருதுப் பட்டிதான்.

விருதுப்பட்டியில் நாடகங்கள் ஆரம்பமாயின. எங்கள் அன்னயார் மதுரையிலே இருந்தார். தந்தையாருடன் நாங்கள் மூவரும் கம்பெனி வீட்டிலேயே தங்கினோம் விருதுப்பட்டியில் தான் எனக்கு முதன்முதலாக ஒரு தங்கப் பதக்கம் பரிசாகக் கிடைத்தது. விருதுப்பட்டி ரயில்வே அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து அளித்த பரிசு அது. பின்னால் எங்களுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் நேர்ந்த காலங்களில்கூட அந்த முதற் பரிசை மட்டும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருந்தோம்.