பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


பெற்றது.தாய்க்கும் பாட்டிக்கும் மாமி, மருமகள் உறவு ஒத்துப் போகவில்லை. சின்னண்ணா பெரியண்ணா இருவரும் திருவனந்த புரத்தில் பாட்டியிடமே வளர்ந்தவர்கள். மதுரைக்கு வரும்போது நானும் பகவதியும் தானிருந்தோம். மதுரை வாசம் உறுதிப்பட்ட பிறகு, பாட்டியார் அவர்களை அழைத்து வந்தார்கள். மதுரைக்கு வந்த பாட்டியார், இறுதிக்காலம் வரை எங்களோடு இருக்கத் திட்டமிட்டுத்தான் வந்தார்கள். அதற்குத் தடையாக இருந்தது, வீட்டில் எந்நேரமும் சச்சரவு. தாயார் எவ்வளவு அடங்கிப்போனலும் சண்டை ஓய்வதில்லை. இந்த நிலையில் பாட்டி, தம் சின்ன மகனிடம் போகவேண்டுமென்று நச்சரித்தார்கள்.தந்தையாரால் பாட்டியின் தொல்லையைப் பொறுக்க முடியவில்லை. விருதுப்பட்டியிலிருந்தபோது பாட்டியாரைத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார் தந்தை. அதன்படி இரண்டு நாள் ஒய்வில் மதுரை சென்று, பாட்டியையும் அழைத்துக் கொண்டு செங்கோட்டை வரை ரயிலில் சென்றார். பிறகு திடீரென்று என்ன நினைத்தாரோ, தெரியவில்லை. பாட்டியாரைத் தனியே அனுப்பிவிட்டு, அங்கேயே தலையை மொட்டை போட்டுக் கொண்டு, உச்சிக் குடுமியோடு விருதுப்பட்டி வந்து சேர்ந்தார். “எதற்காக இந்த மொட்டை?” என்றார்கள் அவரது நண்பர்கள். “தாயாரை ஊருக்கு அனுப்பி விட்டேன். இனிமேல் மீண்டும் அவர்களைப் பார்ப்பேனென்ற நம்பிக்கை இல்லை. எனவே இறுதிக் கடமையை முடித்துக் கொண்டேன்” என்று சமாதானம் கூறினார். இப்போது சிவகங்கைக்குப்பயணமானவுடன் அன்னயாரும் உடன் வந்தார்கள். சிவகங்கையில் தாயாருடன் தனி வீட்டிலேயே வசித்து வந்தோம்.