பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வறுமையோடு உறவு கொண்டுதான் நாடகக்கலை வளர்ந்து வந்திருக்கிறது. ஐந்து வயதில்-பள்ளிக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் நாடகத் துறையில் பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்ட கொடுமை கடந்த தலைமுறையோடு முடிந்துபோனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நாடகக் கம்பெனி என்பது, நடிக்கின்ற பிள்ளைகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாகவும் இருந்து வந்த கொடுமையினை கலைஞர் சண்முகத்தின் நாடக வாழ்க்கையைக் கொண்டே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில், குரு பக்தியை நன்றி உணர்வோடு வெளிப்படுத்துகிறார் இந்நூலாசிரியர். தம்முடைய பெற்றோர்களிடமும் பக்தியையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறார் என்றாலும், நாடகக் குருநாதரிடமே இந்த அரிய பண்புகளை அதிகமாக வெளிப் படுத்துகிறார். இதனை எல்லா நடிகர்களிடமும் நாம் காண முடிவதில்லையல்லவா?

இந்த நூலை மிகச் சிறந்த இலக்கியமாகவே நான் கருதுகின்றேன். தமிழிலுள்ள இதனைப் பிற மொழிகளில்-குறிப்பாக உலகமொழியான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். இது சரித்திர நூல் மட்டுமல்ல; நாடக உலகைப்பற்றிய மிகச் சிறந்த தகவல்நூல். இன்னொரு வகையில் சொன்னால், தமிழ் நாடக மேடையைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் தரும் நாடகக் கலைக் களஞ்சியம் என்றும் கொள்ளலாம். நூலாசிரியருக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.

தம்மோடுபிறந்து, தம்மோடுவளர்ந்து, தமதுவளர்ச்சிக்குத் துணை புரிந்து வருபவர்களான தம் சகோதரர்கள் பற்றி மிகுந்த வாஞ்சையோடு நூலின் பல்வேறு இடங்களில் குறிப்பு களைத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த உயரிய சகோதர வாஞ்சை தான் “டி. கே. எஸ். சகோதரர்கள்” என்ற பெயரே கலைச்சொல் ஆக்கி விட்டது. வருங்கால எழுத்தாளர்கள் இதைவிடவும் பெரிய நூல் ஒன்றைப் படைப்பதற்கான முதல் நூலாக இந்நூல் அமைந்து விட்டது.

அன்பர் திருகாவுக்கரசு நடத்தும் வானதி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுத் தனது வரலாற்றிலே புதியசிறப்பொன்றைச் சேர்த்துக் கொண்டுவிட்டது. நல்ல காகிதத்திலே, பிழையற்ற முறையிலே, அழகிய பதிப்பாக இதனை வெளியிட்ட அன்பர் திருநாவுக்கரசைப் பாராட்டுகின்றேன்.

சென்னை
20-4-72
ம. பொ. சிவஞானம்