பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


எடுக்கவில்லை. சென்னைக்குப் போவதென்று முடிவானதால் புகைப்படம் எடுப்பதற்காக மதுரையிலிருந்து ஒருவரை அழைத்து வந்தார்கள். நாடகமில்லாத ஒருநாள், போலிநாயக்கனூர் கொட்டகையில் சில புகைப் படங்கள் எடுக்கப்பட்டன. அப்போதுதான் நான் முதன் முதலாகப் படமெடுத்துக் கொண்டேன். முதல் படம் என்ன தெரியுமா?... . நாரதர்.

ராஜா எம். ஆர்

அருகில் குமாரபுரம் என்றொரு சிற்றுார். முடிமன்னிலிருந்து சுமார் ஆறு மைல்கள் இருக்கலாம். ராஜா எம். ஆர். கோவிந்த சாமிப் பிள்ளையின் நாடகம் நடப்பதாகக் கேள்விப்பட்டோம். பிள்ளையவர்கள் சுவாமிகளின் அபிமானத்திற்குரிய மாணவர். சுவாமிகளை அவர், “அப்பா” என்றுதான் அழைப்பார். முன்பே மதுரையில் புட்டுத்தோப்பில் இருந்தபோது அவரை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பிள்ளையவர்கள் மிகப் பிரசித்திபெற்ற நடிகர். “சந்தச் சரப சங்கீத சாகித்ய ராஜ போஜ ராஜா எம். ஆர். கோவிந்தசாமி” என்றுதான் அவரைக் குறிப்பிடுவார்கள்.

ஒருநாள் நல்லதங்காள நாடகம் நடப்பதாக அறிந்தோம். சுவாமிகள் எங்களை அழைத்துப் போய் வரும்படி ஆணையிட்டார்கள். தந்தையாருடன் நாங்கள் நாடகம் பார்க்கச் சென்றோம். நல்லண்ணகை வந்த ராஜா எம். ஆர். ‘கழுகு மாமலை முருகா’ என்று தொடங்கும் ஒரு பாடலைப் பாடிக்கொண்டு மேடைக்கு வந்தார். என்ன அற்புதமான சாரீரம்! இடையிடையே பேசிப் பேசி, அவர் பாட்டைத் தொடங்கும்போதெல்லாம், மக்கள் மகிழ்ச்சியோடு கைதட்டி வரவேற்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நாடகமேடையில் நின்ற நிலையில் சொந்தமாகவே கவி பாடும் புலமை பெற்றவர் ராஜா எம். ஆர். அந்த நாளில் தென்பாண்டிப் பகுதி முழுமைக்கும் நாடக மேடைக்கு அவர் ராஜாவாகவே விளங்கினார்.

புதியம்புத்துார், முடிமன், குமாரபுரம் முதலிய ஊர்களெல்லாம் அப்போது எட்டையபுரம் சமஸ்தானத்தைச்