பக்கம்:என்னுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கத்தரி விகடன் ஆனந்த விகடன் அலுவலகம் அப்போது பிராட்வேயில் இருந்தது. இப்போது அப்பர் அச்சகம். ஒருநாள் பொறுப்பாசிரியர் கல்கி அவர்களைப் போய்ப் பார்த்து உதவி ஆசிரியர் வேலை கேட்டேன். "வேலையெல்லாம் இங்க ஒண்ணுமில்லே..." என்று சற்று அலட்சியமாகவே சொல்லி அனுப்பி விட்டார். ஏமாற்றத்துடன் திரும்பினேன். ஆனாலும் கல்கியை நேரில் சந்தித்துப் பேசியதில் ஓர் ஆனந்தம்! அந்த நாட்களில் எனது நெருங்கிய நண்பராக இருந்தவர் தி.ஜ.ரங்கநாதன். மஞ்சரி ஆசிரியர் தி.ஜ.ர. என்றால் சட்டெனப் புரியும். நானும், தி.ஜ.ர.வும் தம்புச்செட்டித் தெருவில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தோம். கல்கி அவர்களைப் போய்ப் பார்த்து உதவி ஆசிரியர் வேலை கேட்டு தோல்வியடைந்தது பற்றி தி.ஜ.ர.விடம் புலம்பினேன். "கவலைப்படாதிங்க. கல்கியிடமே உமக்கு நான் வேலை வாங்கித் தருகிறேன்" என்று நம்பிக்கையோடு சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. அப்போது தி.ஜ.ர. ஹநுமான் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். சிலகாலம் ஹநுமானில் நான் அவருடன் சேர்ந்து உப ஆசிரியராகப் பணி புரிந்துகொண்டிருந்தேன். தி.ஜ.ரவுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது அப்போதுதான். 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/65&oldid=759634" இலிருந்து மீள்விக்கப்பட்டது