பக்கம்:என்னுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளம்பரம் வெளியான மறுநாள் மாலை நாங்கள் இரண்டு பேரும் தம்பு செட்டித் தெருவில் கடற்கரை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தோம். பின்னால் சைக்கிளில் வேகமாக வந்த ஆனந்த விகடன் ஆபீஸ் பாய், எங்களை நெருங்கியதும் ஒட்டி நிறுத்தி, ஒரு சிறிய துண்டுக் காகிதத்தை என்னிடம் நீட்டினான். அப்போது விகடனில் உதவி ஆசிரியராக இருந்த தேவன் எழுதியிருந்தார். "ஆசிரியர் கல்கி உங்களைப் பார்க்க விரும்புகிறார். உடனே விகடன் அலுவலகத்துக்கு வரவும்". "பார்த்திரா? கல்கியே உம்மைக் கூப்பிடுகிறார்! என்றார் தி.ஜ.ர. பெருமிதத்துடன். மறுநாள் காலை பதினோரு மணிக்கு நான் கல்கியைப் பார்க்கப் போயிருந்தேன். என்னைக் கண்டதும் கல்கி, "போன வாரம் நீ இங்கே வந்து வேலை கேட்டாயல்லவா? இப்ப ஒரு வேலை இருக்கு. வேனுமானால் சேர்ந்துக்கலாம்" என்றார். நான் மெளனமாக நின்றேன். "சம்பளம் நாற்பது ரூபாய்தான். ஆரம்பத்தில் அவ்வளவுதான் கொடுப்பார்கள்” என்று சொல்லி விட்டு, " மணியடித்து தேவனைக் கூப்பிடு" என்றார் பியூனிடம். தேவன் வந்ததும் "உனக்கு முதல்ல எவ்வளவு சம்பளம்?” "நாற்பது ரூபாய்”. 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/67&oldid=759636" இலிருந்து மீள்விக்கப்பட்டது