பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

11

கல்லூரி மாணவர்கள் வயது வந்தவர்கள் அவர்களுக்கு அரசியலில் ஈடுபட உரிமை உண்டல்லவா?
உரிமைகளைப் பயன்படுத்துவதற்கும் ஓர் ஒழுங்கு வேண்டும், மாணவர்களுக்குப் படிக்கும் கடமையொன்று இருக்கிறது. அந்தக் கடமை முடியும் வரை அவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருப்பது அவர்களுக்கும் நன்மை: நாட்டுக்கும் நன்மை.
இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது தவறா?
இன்றைய இளைஞர்களின் கையில் எதிர்காலம் இருக்கிறது. ஆனால், அந்த எதிர் காலத்திற்குத் தங்களைத்தகுதிப் படுத்திக் கொள்ளாமல், தற்கால வெள்ளத்தில் அகப்பட்டு அடித்துச் செல்லப்படுகிறார்களே என நினைக்கும் போதுதான் துயரமிகுகின்றது.
இலங்கை உலகத் தமிழ் மாநாட்டில், போலீசார் அக்கிரமம் செய்திருக்கிறார்களே!
சிங்கள அரசியல் வாதிகள் தமிழர்களை வெறுக்கிறார்கள். இதற்குக் காரணம், தமிழர்கள் எளிதில் அகற்றக்கூடிய அயல் நாட்டாராக இல்லாமல் சிங்கள நாட்டுரிமை யுடையவர்களாய் இருப்பது தான். வீண்வெறியால் சிங்களவர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துவரும் தீமை களிலே இது ஒருவகை.
மாநில சுயாட்சி வேண்டும் என்று கேட்கிறார்களே, இதை யார் கொடுப்பது?
மாநில சுயாட்சியைக் கொடுப்பது தனிப்பட்ட மனிதர் எவருமல்லர், இந்தியப் பாராளுமன்றத்தில் மாநில சுயாட்சித் திட்டங்கள் சட்டமாக்கப்பெற வேண்டும். சட்டம் நிறைவேறி விட்டால், மாநில சுயாட்சி வந்து விடும்.