பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பது ஒரு பழமொழி, எதையும் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வதால் அது அறிவுள்ள பிள்ளையாக வளருகிறது. அதனால் அது வாழ்வில் துன்பங்கள், தொல்லைகள் இன்றிப் பிழைத்துக் கொள்ளுகிறது.



கேள்வி கேட்கக் கூச்சப் படுபவன்- கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சுபவன் ஆமையாய், ஊமையாய், மக்காய், மண்ணாங் கட்டியாய்த் தான் வளர்ச்சி பெறுகிறான்.

சமய வாதிகள், வேதங்களைப் பிறர் படிக்கக்கூடாது என்றும், சமயக் கருத்துக்கள் பற்றி அய்ய வினாக்கள் எழுப்பக் கூடாது என்றும் கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். இதனால், சமயங்களைக் காப்பாற்ற முடிந்ததே தவிர மக்களைக் காப்பாற்ற முடியவில்லை, சமயக்கட்டுப்பாடுகளை மீறிக் கேள்விகேட்டு விழிப்புணர்வு பெற்ற மாந்தர்களால் தான் ஒவ்வொரு சமுதாயத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டது.

விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள், பொருளாதாரக் கோட்பாடுகள், மருத்துவ வளர்ச்சிகள் அனைத்துக்கும் ஆதிமூலமாக இருப்பவை என்ன? ஏன்? எப்படி? என்ற கேள்விகளே.