பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 ♦ என் அமெரிக்கப் பயணம்

பணியாற்றும் தெற்கு - தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தின்[1] முன்னைய நிலைகளையும் 1996-பிப்ரவரிக்கு மேல் நான் மேற்கொண்ட புதிய ஏற்பாடுகளையும் வரிசை வரிசையாக நினைவு கூர்கின்றேன். (படம் - 26)

மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம் சர். ஏ.எல். முதலியார் அவர்கள் இந்திய வரலாற்றுத்துறை பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்களை இணைத்துக் கொண்டு தொடங்கிய காலத்தில் எந்தவித சிறப்புச் சொற்பொழிவுகளோ கருத்தரங்குகளோ நடைபெற்றனவாகத் தெரியவில்லை. ஆனால், இந்த நிறுவனத்தின் ஆதரவில் அனைத்திந்திய கீழ்த்திசை மாநாடுகள் பலவிடங்களில் நடைபெறும்போது பேராசிரியர் சாஸ்திரியார் சென்று கலந்து கொண்டதாகத் தெரிகின்றது. நான் வழக்கமாக இந்த மாநாடுகளில் என் ஆய்வு மாணவன் டாக்டர் என். கடிகாசலத்துடன் ஆய்வுக் கட்டுரைகளுடன் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, ஒருமுறை குருட் சேத்திரா பல்கலைக் கழகத்திலும் பிறிதொருமுறை மற்றோர் இடத்திலும் சந்தித்ததை நினைவுகூர முடிகின்றது. குருட்சேத்திராவில் சந்தித்த பொழுது தலையெல்லாம் பொடுவு, அது உடலெல்லார் உதிர்ந்த நிலையில் காணப் பெற்றார் சாஸ்திரியார் மிகவும் பரிதாபகரமான நிலை. அவர் மரித்தபோது அச்செய்தி என் கவனத்திற்கு வரவில்லை.

பேராசிரியர் சாஸ்திரியாரை அடுத்து மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் டாக்டர் கே.கே. பிள்ளையவர்கள். அவர் பணியாற்றிய விவரம் என் கவனத்தில் இல்லை. அவர் மறைந்த செய்தி நாளிதழ்களில் வந்ததைப் பார்க்க முடிந்தது. அப்போது நான் தமிழ்க்கலைக் களஞ்சியத்தில் பதினைந்து மாதம் பணியாற்றி மிகச் சோகமான முறையில் விலக்கப்பெற்ற செய்தியும் மேற்குறிப்பிட்ட செய்தியும் சேர்ந்து கொண்டன. ஏதோ ஒரு பணியாக கன்னியாகுமரி சென்றிருந்த டாக்டர் ந.சஞ்சீவி இந்த இரண்டு செய்திகளையும் நாளிதழ்களில் பார்த்தவர் எனக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ்க் கலைக்களஞ்சியப் பணியிலிருந்து விலக்கப்பெற்ற சோகச் செய்தியை நாளிதழ்களில் படித்தேன். கவலை வேண்டா. உங்கள் கடின உழைப்புக்குப் பொருத்தமான மரபுவழிப் பண்பாட்டு இயக்குநர் பொறுப்பில் சேர்த்து விடுகின்றேன்” என்று எழுதினார்.

தேர்வுக் குழு ஒன்று அமைக்கப் பெற்றது. அதில் வழக்கமாக தமிழ் இலக்கியத் துறைத் தலைவரும் இந்திய வரலாற்றுத்துறைத் தலைவரும் உறுப்பினர்களாக இருப்பர். டாக்டர் ந. சஞ்சீவியும் (தமிழ் இலக்கியத்துறை),


  1. Insstitute of Traditional Cultures of South and South East Asia.