பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 ♦ என் அமெரிக்கப் பயணம்


‘பெரியோரை வியத்தல் இலமே, சிறியோரை

இகழ்தல் அதனினும் இலமே.’

என்ற அடிகள் மன்பதைக்கு என்றும் நிரந்தரமாக அ‘றிவு ஒளி - அறஒளி’ காட்டிக் கொண்டிருக்கும் என்பது என் கருத்து. டாக்டர் சஞ்சீவியால் ‘நன்று’ செய்ய முடியவில்லை. டாக்டர் இராமச்சந்திரன் ‘தீது’ செய்ததாக நான் கருதவில்லை. முறைவழிப்படும் ஆருயிர் என்ற அடி எனக்கு ஒளி காட்டுவதால். இதனால் டாக்டர் சஞ்சீவிக்குப் ‘புகழாரம்’ சூட்டவில்லை; டாக்டர் இராமச்சந்திரனை ‘இகழ்தல்’ செய்யவும் இல்லை. திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பணியேற்ற பின் ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்பட நேர்ந்தபோது,நம்மாழ்வாரின் திருவாய்மொழியில்

தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுகப்

பண்டேபரமன் பணித்த பணிவகையே

- திருவாய் 10.4:9

என்ற பாசுர அடிகளின் கருத்து என் உள்ளத்தைக் கவர்ந்தது. இதனால் வேறுபணிகளில் இறங்கிவிட்டேன். பாரதியாரின் நூற்றாண்டுக் காலமாக இருந்தமையால் அதன் நினைவாக 1. பாஞ்சாலிசபதம்-ஒரு மதிப்பீடு, 2. குயில்பாட்டு-ஒரு மதிப்பீடு, 3. கண்ணன்பாட்டுத் திறன், 4. பாரதீயம் என்ற நான்கு திறனாய்வு நூல்கள் எழுதத் திட்டமிட்டு அப்பணியில் முழு மூச்சில் இறங்கிவிட்டேன். வேறு திசைகளிலும் பணியாற்ற இழுத்துச் செல்லப் பெற்றேன். அவற்றுள் ஒன்று தமிழ் இலக்கியத் துறையில் வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர் பணி. அது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. என் பார்வையில் மூன்று மேல்நிலைப் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் பகுதி நேரத்திட்டத்தில் டாக்டர் பட்டத்திற்கு (பிஎச்.டி) ஆய்வு செய்து வருகின்றனர்.

3. உலக வாணிக மையம் (ஏப்ரல் 3, முற்பகல் 12 மணி): பின்லேடனால் இடிக்கப்பெற்று புனர் அமைப்பிலுள்ள இந்த இடத்தைப் பார்ப்பதற்கு நிலத்தடியிலுள்ள (கரங்கம்) மின்சார இருப்பூர்தி வழியாகப் புறப்பட்டோம். இந்த இருப்பூர்தி சில இடங்களில் ஒன்றன்கீழ் ஒன்றாக மூன்று நிலைகளில் இயங்குகின்றன. இந்த ஊர்திகளுக்கு மேல் ஆறுகள் ஓடுகின்றன; கடல்கள் உள்ளன. அவ்வளவு ஆழத்தில் இவை இயங்குகின்றன.

முதலில் இறங்கிச் சென்ற இடம் மான்காட்டன் தீவு[1] என்பது, அங்கு இறங்கி சுமார் அரை ஃபர்லாங் தொலைவு நடந்து சென்று ஒரு படகில்[2] ஏறினோம். அது படகு அல்ல; நகரும் ஊர் போன்றது. மூன்று அசுரர்கள்,
  1. Manhatton Island
  2. Ferry