பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 ♦ என் அமெரிக்கப் பயணம்

இங்கு தரையெல்லாம் சலவைக் கல் பரப்பப் பெற்றிருந்தது. காலணிகள் வைப்பதற்குத்தனி இடம் அமைக்கப் பெற்றிருந்தது. திருக்கோயிலுக்கு அடியில் (சுரங்கம்) ஒரு பெரிய மண்டபம் இருந்தது. இதில் திருமணங்கள், சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறுவன.

இங்கு திருவேங்கடவன்தான் மூலமுதற் கடவுள். ஏனையவை பரிவார தேவதைகள், முதலில் திருவேங்கடவனை வழிபடுகின்றோம். இங்கு திருமலை சூழ்நிலை நிலவுகின்றது. ஆழ்வார் பாசுரங்கள் நம் மனத்தில் எழத் தொடங்குகின்றன. நம்மாழ்வார் முதலில் காட்சி தருகின்றார்.

அடியேன் மேவி அமர்கின்ற
      அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் உடையானே!
      கோலக் கணிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே!
      திருவேங் கடத்துஎம் பெருமானே!
கொடியார் பொழுதும் உன்பாத
      காண நோலாது ஆற்றேனே! - 6.10:7

என்ற திருவாய் மொழிப்பாசுரத்தை ஓதி உளங்கரைந்து வழிபடுகின்றோம். அடுத்து கலியன் பிரசன்னமாகின்றான். அப்பெருமான் பாசுரங்கள் நெஞ்சில் குமிழியிடத் தொடங்குகின்றன.

குலந்தான் எத்தனையும்
      பிறந்தேயிறந்து எய்த்தொழிந்தேன்
நலந்தான் ஒன்றுமிலேன்;
      நல்லதோர் அறம் செய்துமிலேன்;
நிலந்தோய் நீள்முகில்சேர்
      நெறியார்திரு வேங்கடவா!
அலந்தேன் வந்தடைந்தேன்;
      அடியேனை ஆட்கொண்டருளே

நோற்றேன் பல்பிறவி
      நுன்னைக்காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே
      இடருற்றனன் எம்பெருமான்!
கோல்தேன் பாய்ந்தொழுகும்

      குளிர்சோலைசூழ் வேங்கடவா!