பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 ♦ என் அமெரிக்கப் பயணம்

ஸ்டேட்டன் தீவுக்கு[1]வந்தோம். இந்தத் தீவையும் புரூக்லினையும்[2] இணைப்பது வெரசோனா என்ற அழகிய பாலம். இஃது ஓர் தொங்குபாலம் (கொல்கத்தா அருகிலுள்ள தொங்குபாலம் போல). கொல்கத்தா பாலத்தின் கீழே கப்பல்கள் போவது போல இந்த வெரசோனா பாலத்தின் கீழும் கப்பல்கள் செல்லுகின்றன. இந்தப் பாலத்தின் கட்டமைப்பு முறை, விளக்கு வசதிகள் அமைக்கப் பெற்றிருக்கும் முறை முதலியவை பார்ப்போர் கண்ணையும் கருத்தையும் கவரவல்லனவாக உள்ளன.

பாலத்தைக் கடந்து புரூக்லின் வரும்போது இரவுநேரம். அன்று சித்திர பெளர்ணமியாதலால் ஒருபுறம் மாலைக்கதிரவன் மறையும் காட்சியும் அதற்கு எதிர்ப்புறம் திங்கள் எழும் அழகிய காட்சியும் கண்ணுக்கு விருந்தாக இருந்தன. அங்கிருந்து குயின்ஸ்பரோ நுழையும் பொழுது மான்காட்டனிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், இடிபாடுகளுடன் இருந்த வர்த்தக மையத்தின் அருகேயுள்ள பல உயர்ந்த கட்டடங்கள் சுதந்திர தேவியின் சிலை முதலியவை நம் கண்ணுக்குப் புலனாயின.

புரூக்லினிருந்து நாம்வதியும் குயின்ஸ்பரோவை அடைந்து இரவு 8.30 மணிக்கு இல்லத்தை அடைந்தோம். இந்த அட்லாண்டிக் மாநகர் பயணம் பல்வேறு வகைகளில் மகிழ்ச்சியை நல்கி மனநிறைவு அளிப்பதாக அமைந்தது.


  1. நியுயார்க்கின் ஒருபரோ
  2. நியுயார்க்கின் மற்றொரு பரோ