பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை

♦125



2. பூங்கா


இங்கு ஒரே ஒரு பூங்காவைத்தான் பார்க்க முடிந்தது.

1. காட்டன்வுட் பூங்கா'[1]: மே 16, வியாழன் மாலை 7.15 மணிக்கு என் பேத்தி மிருனாளினி இல்லத்திலிருந்து சுமார் 5 கல் தொலைவிலுள்ள இந்தப் பூங்காவிற்குப் புறப்பட்டோம். சுமார் 20 ஏக்கர் பரப்புள்ள மேடு பள்ளங்களான இடம். அனைத்திடங்களும் போய்வர சீமைக்காரையாலான நல்ல நடைபாதை அமைப்பு. சில இடங்களில் கூடாரம் போன்ற அமைப்புகள். அவற்றின் கீழ் அமர்வதற்காக பெஞ்சு போன்ற இருக்கை வசதிகள். பகலில் வெயில் காயும்போது பூங்காவிற்கு வருவோர்கள் வெப்பம் பொறுக்காமல் சிறிது நேரம் அமர்வதற்கு இந்த வசதிகள். பிறஇடங்களிலும் ஆங்காங்கு கூடாரம் இல்லாது அமைக்கப்பெற்ற இருக்கை வசதிகள். பூங்காவிற்கு வருவோர்கள் சுற்றி அலையும் போது அயர்ச்சியால் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாற இந்த வசதிகள். பூங்காவின் இருபக்க ஒரங்களிலும் சுமார் 50-க்கு மேற்பட்ட கார்கள் வரிசையாக நிறுத்தப்பெற்றிருந்தன. இவை பூங்காவிற்குப் பார்வையாளர்களாக வந்தவர்களின் கார்கள். பெரிய இடமாதலின் மக்களின் கூட்டம் கண்ணுக்குப் புலனாவதில்லை. எங்கோ புல்வெளியில் மர நிழலில் அவர்கள் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அவர்களோடு வந்த சிறுவர்சிறுமிகள் மிதிவண்டிகளிலும், குழந்தைகள் தாமாக இயக்கும் மூன்று சக்கர ஊர்திகளில் ஆங்காங்கு நடைபாதைகளில் சுற்றுவதைக் காண்கின்றோம்.


பெரிய இடத்திலமைந்த பூங்காவாதலால் டென்னிஸ்[2]”, கூடைப்பந்து[3]’, வாலிபால்”[4] ஆகிய விளையாட்டுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததைப் பார்க்கின்றோம். குழந்தைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஒரு தனி இடம். குழந்தைகள் ஆடுவதற்கு விளையாட்டு ஊஞ்சல்கள் (தாய்மார்கள் இவற்றில் தம் குழந்தைகளை அமர்த்தி ஆட்டுவார்கள்); இதில் ஆடும் குழந்தைகட்கும், ஆட்டும் அன்னைமார்களுக்கும் ஆனந்தம் பொங்கும். சிறுவர்கள் தாமாக ஏறி இறங்கும் வசதிகள் அமைந்த அமைப்புகள், சறுக்கி விளையாடும் அமைப்புகள் இவற்றைக் கொண்ட ஏற்பாடு இருந்தது. இவற்றில் சிறுவர்கள் ஏறியும் இறங்கியும் சறுக்கியும் சிறிதும் அச்சமின்றியும் விளையாடுவதைக் காணும்போது தாய்மார்களுக்கும் மகிழ்ச்சி, பார்வையாளர்க்கும் களிப்பு.இந்த இடங்களில் சிறுவர்கள் பல்வேறுவகை ஊர்திகளை இயக்கி விளையாடுவதைக் காணலாம். இந்த வகை விளையாட்டுகளில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதில்லை. அவ்வளவு கவனத்துடன் விளையாடுகின்றனர்.


  1. 1. Cottonwood Park
  2. 2. Tennis
  3. 3. Basket Bali
  4. 4. Volley Ball