பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ♦ என் அமெரிக்கப் பயணம்



இங்கு எங்களுடன் வந்த அரவிந்தனுடன் வந்த இரு நண்பர்கள் தம் மனைவிமார்களுடனும் குழந்தைகளுடனும் கார்களில் வந்திருந்தனர். இருவரும் தமிழ் நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் இளங்கோவன் என்பார் கணிணிதுறையில் நல்ல முறையில் பொருளட்டுபவர். அவர் துணைவியார் வேதியியலில் எம்.எஸ்.சி, பி.எச்.டி பட்டங்கள் பெற்றவர். இவர் இல்லக்கிழத்தி; குடும்பத்தலைவி. மற்றொருவர் கமலக் கண்ணன் என்பவர். இவரும் கணினி துறையில் பணியாற்றி நல்ல முறையில் பொருளிட்டுவர்.துணைவியார் பி. எஸ்.சி (விலங்கியல்) பட்டதாரி.பி.எட்பட்டம் பெற்றவர். இவர் செட்டிநாடு வித்யோதயா என்ற மேனிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். இத் தம்பதியர் சென்னையில் பட்டினப்பாக்கத்தில் குடியிருந்தவர்கள். இவர்கள் மதுரை மாவட்டத்தில் கம்பம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்.

நாங்கள் தனிமையாகக் காரில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தோம். தமிழகத்தைச் சேர்ந்த இந்த இரு தம்பதியர்களைச் சந்தித்து உரையாடிய போது தமிழகத்தில் இருப்பது போன்ற மனநிலையை அடைந்து மகிழ்ந்தோம். தாய் மொழியாகிய தமிழ் மக்களை எவ்வளவு உறைப்பாக ஆட்கொண்டுள்ளது என்பதை உணரமுடிந்தது. தமிழகத்தில் தமிழ்ச் சூழ்நிலையில் இருந்தபோது இந்த உணர்வு இருப்பது தெரியாமல் இருப்பது இயல்பு. அமெரிக்காவில் இந்த உணர்வு தெரிந்தபோது எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தோம்.

இந்த இரு நண்பர்களும் எங்களை “ஊர் பிடித்திருக்கிறதா?” என்று வினாவினார்கள். என்ன பதில் சொல்வது? “நாங்கள் இருவரும் வயோதியர்கள். 80 அகவையைக் கடந்தவர்கள். காடு வா, வீடு போ’ என்ற நிலையிலுள்ளவர்கள். புராண இலக்கியங்களில் பார்க்காத வீட்டுலகத்தை (மோட்சத்தை)ப் பற்றிக் கேள்விப்படும் உலகத்தை இங்குப் பார்த்து அனுபவிக்கின்றோம். நாங்கள் இருவரும் மூன்று மாத காலம் தங்கிப் பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளோம். எங்கள் இளைய மகன் டாக்டர் இராம கிருட்டிணன் மருத்துவத் துறையில், நியுயார்க்கில் நிரந்தர அமெரிக்கவாசியாகப் பணியாற்றி வருவதாலும் என் பேத்தி இங்கு (டாலஸில்) பணியாற்றி வருவதாலும் அமெரிக்கா வர வாய்ப்புகள் கிடைத்தன; பல இடங்களைச் சுற்றிப்பார்த்து வருகின்றோம். ஜூன் 24-25-இல் தாயகம் (தமிழ் நாடு) திரும்பிவிடுவோம்” என்று கூறினேன்.

தொடர்ந்து, “தமிழ் நாட்டில் இங்கிருப்பது போல் செல்வம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் உண்டா? இங்கு நீங்கள் எளிதாகக் காரில் வந்துள்ளீர்கள். அங்கு இப்படி வரமுடியுமா ? கனவில்கூட இத்தகைய வசதிகள்