பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 ♦ என் அமெரிக்கப் பயணம்


பாதையோரங்களில் ஆங்காங்கு பல்வேறு வண்ண மலர்கள் மிளிரும் சிறு சிறு செடி வகைகள் அழகான முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. பல இடங்களில் பச்சைப் பட்டு விரித்தாற் போன்ற பாங்குகளில் புல் வெளிகள் பார்ப்போர் கட்புலனைக் கவர்வதாக உள்ளன. சிறுவர்களும் குழந்தைகளும் இவ்விடங்களில் குதித்தும் ஓடியாடியும், படுத்தும் களித்தும் விளையாடுவதைக் காண முடிகின்றது. சில இடங்களில் சிறுவர்கள் மெல்லிய இரப்பராலான பந்துகளை தூக்கியெறிந்து களிப்பதையும் காண்கின்றோம். சில இடங்களில் புல்வெளிகளைச் சுற்றியுள்ள மேடைகளில் பல்வேறு வகையான வண்ணப் பூச்சுகள் பூக்கும் சிறு சிறு செடிகள் வளர்க்கப்பெற்று புல்வெளிக்கு பொலிவினைத் தருமாறு அமைந்துள்ளது.

இந்தத் தோட்டத்தில் எங்கள் மனத்தைக் கவர்ந்தது.அருகிலுள்ள பெரிய ஏரி[1] அதிலுள்ள நீர்தான் இத்தோட்டத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். ஓரிடத்தில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் பள்ளத்தில் அமைந்த தோட்டம்[2] இதில் சிறு சிறு அழகான புல்வெளிகளும் அவற்றைச் சுற்றிலுமுள்ள விளிம்புகளில் அழகான வரிசைகளில் வண்ணப் பூக்கள் பூக்கும் சிறு சிறு செடிகளும் பார்ப்போர் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாகவுள்ளன. கலை மெருகு அமைந்த இச் சிறு தோட்டத்தைக் காண்போர் எவரும் இதனை மறக்க முடியாது. என் பேத்தி அப்படியே நின்று விட்டாள். (படம் - 47)

ஓரிடத்திற்கு வருகின்றோம். அங்கு மாபெரும் மரங்கள். நெருக்கமான இடங்களில் அவற்றின் உச்சிகளே கண்ணுக்கு எட்டா. பளபளப்பான கனத்த அடிமரங்களினிடையே புகுந்து சென்று உலவினோம். ஓரிடத்தில் பேத்தி அப்படியே நின்று விட்டாள். அரவிந்தன் அந்நிலையில் ஓர் ஒளிப்படம் எடுத்தான். மரங்களிடையே புகுந்து வெளிவந்தோம். (படம் - 48)

அற்புதமான மர வகைகள் கண்ணையும், கருத்தையும் கவர்வனவாகத் திகழ்கின்றன. ஒரு பெரிய மரம், நம்மூரில் காணும் புன்னை மரத் தோற்றம். அதில் நாரத்தை அளவு பெரிய வெள்ளை மலர்கள்; சில பூக்காமலும், சில சிறிதளவு மலர்ந்தும், சில நன்றாக மலர்ந்தும் காணப் பெறுகின்றன. இந் நிலையில் மரக் காட்சிகளும் உள்ளத்தைக் கவர்கின்றன. அடுத்து இன்னொரு பெரிய மரம், மரம் முழுவதும் சிறிய இலைகள், தட்டைப் பயறு அளவுள்ள ஆனால், மிகச் செந்நிறம் கொண்ட பொருள்கள் நிறைந்து காணப் பெறுகின்றது. மரத்திலும் இலைகள் நடுவே இப்பொருள் நிறைந்து காணப் பெறுகின்றது. மரத்தின் கீழும் இவை ஏராளமாக உதிர்ந்து காணப் பெறுகின்றன. இன்னும் பல வகை மரங்கள். அவற்றையெல்லாம் எடுத்துக் காட்ட இடம் போதாது. அதனால் அவை தவிர்க்கப் பெறுகின்றன.


  1. White Rock Lake.
  2. Sunken Garden.