பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 ◆ என் அமெரிக்கப் பயணம்



முதற் குறிப்பையுடைய பாசுரத்தில் வருவது. ஒப்பிலியப்பன் சந்நிதியைச் சேவித்து முடித்துக்கொண்டு திருநறையூர்’ என்ற திவ்விய தேசத்தை நோக்கி வருகிறார் திருமங்கையாழ்வார்.இந்த இரண்டு திவ்விய தேசங்களும் தஞ்சை மாவட்டத்தில் சில கல் தொலைவில் இருப்பவை. சாரநாதப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் திருநறையூர் பற்றி ஆழ்வார் (பெரி. திரு. 6.4 முதல் 7.3 முடிய) 100 பாசுரங்கள் பாடப் போகின்றார் என்ற குறிப்பு இத் தொடரில் இருப்பதாகக் கூறுவர் பட்டர். ‘திருநறையூர் பெருக்கிற்கு சினையாறு படுகிறது கிடாய்’ என்பது அவருடைய குறிப்பு.

விளக்கம்: நீரற்றுக் காய்ந்து கிடக்கும் காவிரியில் மேட்டுர் அணை திறந்துவிட்டபின் வெள்ளப் பெருக்கு வந்து கொண்டிருக்கும்போது நீர் வருவதற்கு முன்னே சில அடித் தொலைவில் நீர் பொசிந்து காட்டும்; நீரின் வெள்ளம் வருவதை ஈரத்தால் காட்டும். அது போல திருவிண்ணகரிலிருந்து மங்கை மன்னனின் பாசுரப் பெருக்கு (100 பாசுரங்கள்) வருவதை இத்தொடர் “பொசிந்து காட்டுகின்றது என்பதாகும். பட்டரின் கூரிய அறிவு இங்ஙனம் பொசிந்து காட்டுவதைப் போல் வேறு எவர் அறிவு காட்ட முடியும்?

(14) நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் : இது நறையூரைப் பற்றிய திருமங்கையாழ்வார் பாசுரத்தின் ‘வள்ளிகொழு நன்முதலாய’ (பெரி. திரு. 6.7 : 6) என்று தொடங்கும் பாசுரத்தின் இறுதியடியாகும். இதன் விளக்கம் ‘பட்டர் நிர்வாகம்’ என்பதன்பாற்பட்டது. திருநறையூரின் வயல் வளத்தை விளக்குவது. தாமரைப்பூவில் பாயல் கொண்டிருந்த ஆண்நண்டின் (அலவன்) முகத்தைப் பார்த்துப் பெண் நண்டு (நள்ளி) பிணங்கும் என்பது இதன் பொருள். பட்டர் தரும் விளக்கம்: ஒர் ஆம்பல் மலரில் நண்டுத் தம்பதிகள் இனிது வாழ்கின்றன. ஒரு நாள் ஆண் நண்டுக்கு கருக்கொண்டுள்ள தன் பேடைக்கு இனிய பொருள்களைக் கொண்டு வந்து தர வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஆம்பல் குவியும் அதிகாலையில் தாமரைப் பூ மலரும் நேரத்தில் அதனை நோக்கிச் சென்றது. அதிலுள்ள மகரந்தத்தைத் திரட்டிக் கொண்டிருந்தது. மாலை முடிந்து பகலவன் மறையவே. தாமரைப் பூ மூடிக் கொண்டது. நண்டு அதனுள்ளே அகப்பட்டுக்கொண்டு வெளிவர முடியவில்லை. தாமரையை மலர்த்தி எப்படியாவது வெளிக்கிளம்ப முயன்றும் முடியவில்லை. அடுத்த நாள் கதிரவன் தோன்றும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. இரவெல்லாம் மலரினுள் புரண்டு பொழுது புலர்ந்ததும் வெளிப் போந்தது. தாதும் கண்ணமும் உடலெங்கும் ஒட்டியவண்ணம் தன் மனைக்கு (ஆம்பல்) விரைந்து வந்து சேர்ந்தது. பகற்பொழுதில் ஆம்பல் மூடிக் கொள்ளுமாதலால் ஆண் நண்டு அங்கு வந்து சேரும் நேரமும் பெண்நண்டு கிடக்கும் ஆம்பல் மலர் மூடிக்கொள்ளும் சமயமும் ஒன்றாக இருந்தது. இதனைப் பார்த்தால் ஆண் நண்டு இரவில் வேறிடத்தில் தங்கி வந்த