பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ◆153

 படியாலும் உடலில் சுவடு இருந்தபடியாலும், ஊடல் கொண்டு கதவை அடைத்துக்கொள்ளும்படியாக இருந்தது. ஒரு புறத்தில் மலர்ந்த தாமரை மலர்களும் மற்றொரு புறத்தில் கூம்பியிருக்கும் ஆம்பல் மலர்களும் விளங்கப் பெற்ற வயல் வளத்தைச் சொன்னவாறு இது.

இவ்வாறு பட்டர் விளக்கம் தந்தவுடனே பிள்ளை நறையூர் அரையர் “ஆராய்ந்து குற்றம் இருப்பதை உறுதி செய்த பிறகு தானே தண்டிக்க வேண்டும்?” என்று கூற, “என் செய்வோம்? கேள்வி இல்லாத பெண்ணரசு நாடாயிற்றே!” என்று அருளிச் செய்தாராம் பட்டர்.

இதனால் ‘நாச்சியார் கோயில்’ என்ற பெயரைக் குறிப்பிட்டாராம். இவ்வூரில் எல்லாவற்றிற்கும் பிராட்டிக்கே முதலிடம் திருவீதிப்புறப்பாடுகளில் நாச்சியார் முன்னே எழுந்தருள்வதும், பின்னே பெருமான் எழுந்தருள்வதுமாக இருக்கும். ஆணரசு நாடென்றால் கேட்பாருண்டு. பெண்ணரசு நாடென்றால் கேட்பாரில்லை என்று சுவைபடக் கூறியதாகும் இது. இதனை அறிந்த நாமும் சுவையை அநுபவிக்கின்றோம். இல்லையா?

(15) தேரும் போயிற்று; திசைகளும் மறைந்தன; செய்வதொன் றறியேனே': ‘மாரிமாக்கடல் (பெரி. திரு. 8.5:2) என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்தின் இறுதியடியாகும் இது. மகள் பாசுரமாக நடைபெறுவது இது. இங்கு பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் கண்ட விளக்கத்தைத் தருகின்றேன்.

உறையூரில் அரசனுக்கு உடம்பு பிடிக்கும் தொழிலில் வில்லி என்ற மல்லன். அவன் மனைவி பொன்னாச்சி. பின்னர் இருவரும் பிள்ளை உறங்கா வில்லிதாசர், பொன்னாச்சியார் என்ற பெயர்களில் இராமாநுசரின் அடிமையானார்கள். வில்லிதாசர் திருநாடு அலங்கரிக்கும் நிலை வருகிறது. இராமாநுசர் திருவடிகளில் தமது தலையையும் தம் கால்களைப் பொன்னாச்சியார் மடிமீதும் வைத்துக்கொண்டும் தன் மனைவியிடம் பேசுகிறார்: “நாம் உடையவரின் அடிமையாகக் கைங்கரியம் செய்து வாழ்ந்தோம். நமக்கு வீடுபேறு உறுதி. நான் முதலில் செல்லுகிறேன். உனக்காக திருநாட்டில் காத்திருப்பேன்’ என்று சொல்லியவண்ணம் அவர் ஆவி பிரிகின்றது.

இராமாநுசர் வில்லிதாசனைத்தம் அபிமான புத்திரனாகக் கருதியதால் (தாசருக்கு இரு புத்திரர்கள் இருப்பினும்[1] மாறனேர் நம்பியைக் கொண்டு ஈமச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்திருந்தார்[2].


  1. 9. வண்டலங்கார தாசர், செண்டலங்கார தாசர் என்ற இருவர்.
  2. 10. தலைவியொருத்தி மாலைக் காலத்தில் தன் காதலனின் பிரிவாற்றாமையைப் பொறுக்கமுடியாமல் பாடுவதாக அமைந்த 10 பாசுரங்களைக் கொண்டது.