பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ◆155


எப்படியோ இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த செய்தி பராசர பட்டருடைய திருச் செவியை எட்டுகின்றது. “ஆகா..... எவ்வளவு ஆத்திகனாயிருந்தால் இந்த வார்த்தை சொல்ல முடியும் ? இவனை மேலெழுந்தவாரியாகப் பார்த்து நாத்திகன் என்றிருந்தோமே. இவ்வளவு பேசும் பரிபாகமுடையவனா இவன் ?” என்று மிகவும் ஈடுபட்டாராம். இன்று பல்வேறு ஆசாரபூதிகளைப் பார்க்கும் நமக்கு இவ்வரலாறு வியப்பினை விளைவிக்கின்றது அல்லவா ?

(17) ‘போம்பழி யெல்லாம் அமனன் தலையோடே’: மானேய் நோக்கி மடவாளை (திருவாய் 15:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்திற்கு விளக்கம் கூறும்போது நம்பிள்ளை வாக்காக வருவது. இந்தப் பாசுரத்தில்,

‘கூனே சிதைய உண்டையில்
திறத்தில் தெறித்தாய் கோவிந்தா

என்ற இரண்டாம் அடிக்குப் பொருள் கூறும்போதுஇராமாவதாரத்தில் ஒன்றும் கிருட்டிணாவதாரத்தில் ஒன்றுமாக இரண்டு வரலாறுகளை ஏறிட்டுக் கூறுவர் வியாக்கியாதாக்கள். இரண்டாவதைக் குறிப்பிடும்போது நம்பிள்ளை: “அன்றிக்கே தீம்பு சேருவது கண்ணனுக்கே யாகையாலே ‘போம்பழியெல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாப்போலே அவன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுதல்” என்று குறிப்பிடுவர். போம்பழியெல்லாம் அமணன் தலையோடே என்ற நம்பிள்ளை சூக்தியில் அடங்கிய வரலாறு நகைச்சுவை அடங்கியது. அதனை மட்டும் ஈண்டு கூறுவேன்.

‘கள்ளன் ஒருவன் ஒரந்தணன் இல்லத்தில் கன்னம் போட்டான். அந்தச் சுவர் அன்றைக்குத்தான் வைக்கப்பெற்ற ஈரச் சுவர். ஆதலால் சுவரால் அமுக்கப்பெற்றுக் கள்ளன் மாண்டு போனான். இந்நிலையில் கள்ளனின் உறவினர்கள் அந்தணனிடம் பழி தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். பின்னர் இரு திறத்தாரும் நியாயம் கோரி அரசன் பக்கம் வருகின்றனர். அரசனோ அறிவற்றவன்; மூர்க்கன். அவன் அந்தணனை நோக்கி, “அந்தனா,நீஈரச் சுவர் வைத்ததனாலன்றோ கள்ளன் மாண்டான். ஆதலால் நீதான் பழிதர வேண்டும்” என்கின்றான். அந்தணன், “ஐயோ, இவ்வாறு ஈரச்சுவர் வைத்தது எனக்குத் தெரியாது. சுவர் வைத்த பணியாளைக் கேட்க வேண்டும்” என்று தன் பொறுப்பைக் கழற்றி விட்டான். பின்னர் பணியாளனை வரவழைத்து “நீ தானே ஈரச் சுவர் வைத்தாய்; நீ தான் பழி தர வேண்டும்” என்று கட்டளை இடுகின்றான். அந்தப் பணியாள் “தண்ணிர் விடுகின்றவன் அதிகமாக விட்டுவிட்டான்; நான் இதற்குப் பொறுப்பல்லேன்” என்று கூறித் தட்டிக் கழித்தான். பின்னர் தண்ணிர் விட்டவனைத் தருவித்து