பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 ◆ என் அமெரிக்கப் பயணம்



விசாரித்தபோது அவன், ‘குயவன் பெரிதாகச் செய்த அளவு பானையைத் தந்தான்; அதனால் நீர் அதிகமாயிற்று நான் என்ன செய்வேன்?” என்று கூறி நழுவினான். குயவன் அழைக்கப்பட்டு விசாரிக்கப் பெறுகின்றான். அவனும், “என்னால் வந்ததன்று; நான் பானையை அளவாகச் செய்து கொண்டிருந்தேன்; அதனைச் செய்துகொண்டிருந்தபோது தாசியொருத்தி போகவரத் திரிந்தாள்; என் கவனம் கலைந்தது. அவளைப் பார்க்கிற பராக்கில் நான் அறியாமல் பானை பெருத்துவிட்டது போலும்.நானென்ன செய்வேன்?” என்று கையை விரித்தான். பின்னர் தாசி வரவழைக்கப்பட்டு விசாரிக்கப் பெறுகின்றாள். அவளும் “இஃது என் பிழையன்று. துணி வெளுப்பவன் தன் சேலையை விரைவில் தராததால் நான் அவன் வீட்டிற்குப் போக வரத் திரிந்தேன்” என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டாள். பிறகு துணி வெளுப்பவனை அழைத்து விசாரிக்கின்றான் வேந்தன். அவனும், “அரசர் பெருமானே, நான் இதற்குப் பொறுப்பல்லேன், துணி துவைக்கும் துறையில் உள்ள கல்லின் மீது ஒர் அமணன் (திகம்பரன்) உட்கார்ந்திருந்தான். எவ்வளவு உசுப்பியும் அவன் எழுந்து செல்லவில்லை; பிறகு அவனாகவே எழுந்து சென்ற பிறகு சேலையைத் துவைத்துத் தர வேண்டியதாயிற்று. நான் என்ன செய்வேன். அந்த அமணனே தாமதத்திற்குக் காரணன் ஆவான்” என்று பதிலிறுத்துத் தன் பொறுப்பைக் கழற்றி விடுகின்றான். பின் அமணனைத் தேடிப்பிடித்துக் கொணர்ந்து விசாரித்தான் அரசன். “நீயன்றோ இத்தனையும் செய்யக் காரணன் ஆனாய்.நீதான் பழி கொடுக்க வேண்டும்” என்று அரசன் ஆணையிட்டான். அவன் மெளனியாகையால் ஒன்றும் பேசாமல் வாளா இருந்தான். மூட அரசன் “உண்மையில் பழி தன்னிடத்தில் உள்ளதனால்தான் இவன் வாய் திறக்காமல் வாளா இருக்கின்றான்; இவனே குற்றவாளி” என்று தீர்மானித்து அவன் தலையை அரியக் கட்டளை இட்டான்.

அமணன் குற்றம் செய்யாதிருக்கவும் பழி அவன் தலையில் ஏறினாப் போலே கண்ணபிரான் தீம்பு செய்யாதிருந்தாலும் பிறருடைய தீம்பு அவன் தலையில் ஏறும் என்று விநோதமாகக் காட்டப் பெற்றது.

பல்லாயிரவர்இவ் வூரில்
பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன்மேலன்றிப் போகாது

- பெரியாழ். திரு. 2.8 : 5

என்று யசோதைப் பிராட்டி வாக்கில் வைத்து பெரியாழ்வார் பேசுவது போல் ஊரில் நடைபெறும் தீம்புகளையெல்லாம் தனக்கே கொள்ளப் பிறந்த கண்ணபிரான் மேலே இத் தீம்பையும் ஏறிட்டு விடலாம் என்று ஆழ்வார்