பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ◆161



வருகின்றேன்” என்றான். உரலும், குழவியும் அவன் கண்ணுக்கு சிவலிங்கத்தை நினைப்பிக்கிறபடியால் அதை அவன் தவிர்த்ததாகச் சொன்னான். இராமாநுசர் அதைக் கேட்டு அவனுடைய உண்மையான வைணவ ஈடுபாட்டைக் கண்டு மெச்சி அவனைப் பாராட்டினார்.

(24) ‘தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்ற பொய்கையாழ்வாரின் பாசுரத்தின் (44) விளக்கம் பற்றி வருவது இந்தப் பாசுரம். இராமாநுசரின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியுடன் பொருந்தி அமைகின்றது. அவர் திருவரங்கத்தில் வாழ்ந்தபோது ஒரு சமயம் மாதுகரத்திற்கு (பிச்சைக்கு) திருவரங்கம் திருவீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் உள்ளம் முதலாழ்வார்கள் என்று வைணவர்கள் குறிப்பிடும் பொய்கையாழ்வார் அருளிய மேற்குறிப்பிட்ட பாசுரத்தின் பொருள் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தது. இறைவன் தன் உருவில் மனிதனைப் படைத்தான் என்கின்றது கிறித்தவர்களின் சத்திய வேதம் என்பதை நாம் அறிவோம். இதனை மறுத்து மனிதன் தன் உருவில் இறைவனைப் படைத்து விடுகின்றான் என்று அறிவியல் மனப்பான்மை தெரிவிக்கின்றது என்பதும் நமக்குத் தெரியும். இந்த இருவகை மனப்பான்மைகளையும் சமரசப் படுத்துவது போல் அமைந்துள்ளது பொய்கையாழ்வாரின் அருள் வாக்கு.

இவ்வாறு சிந்தித்துக்கொண்டே இராமாநுசர் வீதி வழியே போய்க் கொண்டிருந்தார். அப்போது தெருப்புழுதியில் சில பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். திருவரங்கத்துச் செல்வர்கள் அல்லவா? திருக்கோயிலில் தாங்கள் கண்டவற்றையே தங்கள் விளையாட்டிலும் பிரதிபலிக்கச் செய்தனர். பாவனை சிறுவர்களின் விளையாட்டின் ஒரு முக்கிய கூறு என்பதை உளவியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆண் பிள்ளைகள் ‘அப்பா விளையாட்டும்’, பெண் பிள்ளைகள் ‘அம்மா விளையாட்டும்’ இருவரும் ஆசிரியர் விளையாட்டும் விளையாடுவதை நாம் காணத் தான் செய்கின்றோம். கற்பனையாற்றலால் ஊஞ்சல் கப்பலாக மாறி விடுகின்றது! மரக்கட்டை குதிரையாகி விடுகின்றது! உயிரில்லாதவை உயிருள்ளவையாகி விடுகின்றன; பேசுகின்றன! கடை வைப்பதிலும் பள்ளிக் கூடம் வைப்பதிலும் பாலர்கட்கு அதிக ஆசை என்பதை நாம் அடிக்கடி காணத்தான் செய்கின்றோம்.

இராமாநுசர் தெரு வழியே போய்க்கொண்டிருந்தபோது சிறுவன் ஒருவன் மண்ணில் சில கோடுகளை வரைகின்றான்; ‘இதோ திருக்கோயில்’ என்கின்றான். இன்னொரு சிறுவன் வேறு இரண்டொரு கோடுகளைக் கீறி ‘இதோ பெரிய திருமண்டபம்’ என்கின்றான். அந்த இடத்தை நெருங்கி வந்து