பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஃபிலடெல்ஃபியா மாநிலத்தில் உள்ளது ◆ 165


இருந்தபடி ஊஞ்சலில் எழுந்தருளியிருக்க அவர் திருமுன் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற்றன. அன்று எங்கள் உற்சவங்களுடன் வேறு ஐந்து உற்சவங்கள் நடைபெற்றன. ஐதரபாத்தைச் சார்ந்த தெலுங்கு அர்ச்சகர் (இளைஞர்) ஒருவர் நல்ல முறையில் நடத்தி வைத்தார். இறைவியர் இருவருக்கும் திருப்பூட்டு (மங்கள சூத்திரம்) சூட்டப்பெற்ற பிறகு வழிபாடு நடைபெற்றது. பிறகு தீர்த்தம் திருத்துழாய் வழங்கப்பெற்று சடகோபம் சாதிக்கப் பெற்றது.

எங்களுடன் பப்பலோவிலிருந்து வந்த அன்பர்கள் அனைவரும் உற்சவத்தில் பங்கேற்றனர். பிட்ஸ்பர்க் நகர் பல்கலைக்கழகத்தில் மனோமருத்துவத்துறையில் பணியாற்றி வரும் டாக்டர் மாதவன் குடும்பத்துடன் வந்திருந்தார். இவர் திருப்பதியில் என் மகன் டாக்டர் இராமகிருஷ்ணனின் ஒருசாலை மாணாக்கர். திருக்கல்யாண உற்சவம் செய்வித்தவர்கட்கு தலா ஒரு லட்டு வீதம் வழங்கப்பெற்றது. அதைத் திருக்கோயிலில் அது வழங்கும் இடத்தில் பெற்றுக் கொள்ளவேண்டும். இதனைப் பெற்றுக்கொண்டு அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யப்பெற்றிருக்கும் திருவேங்கடவனைச் சேவிக்கின்றோம். மனதிற்குள்,

அகல கில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகலாய் உலகம்மூன்று
உடையாய்! என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

- திருவாய். 10:10:10

என்ற பாசுரத்தை சேவிக்கின்றோம். வேங்கடம் மேய விளங்கினைச் சேவித்த அநுபவத்தைப் பெறுகின்றோம். அவனும் இவனும் ஒருவர்தானே.

அடுத்து பிரசாதங்கள் விற்கப்பெறும் இடத்திற்கு வருகின்றோம். சாம்பார் சாதம், ததியோதனம், கலவை எதை வாங்கினாலும் 1% டாலர். இவற்றை வாங்கிக்கொண்டு உண்ணும் இடத்திற்கு வருகின்றோம். யாரோ ஒருவர் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் செய்துள்ளார். அவர் திரு. சீனிவாசலு செட்டிக்கு (தனஞ்செயனின் அண்ணன்) அன்புடன் வழங்கின ரவாகேசரி, பால் பாயசம், தயிர்வடை இவையும் வந்து சேர்ந்தன. இவற்றையெல்லாம் உட்கொண்ட பிறகு ஊருக்குத் திரும்பத் தயாராகின்றோம். (படம் - 58)