பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172◆ என் அமெரிக்கப் பயணம்


அமைக்கப்பெற்றது. யெஃபர்சனால் வியப்பார்வமுடன் பாராட்டப்பெற்ற பண்டைய பாணியைக் கொண்டது. இந்தக் கட்டடத்தின் உள்ளே 19-அடி உயரமுள்ள வெண்கலத்தாலான யெஃபர்சனின் சிலை ஒன்று உள்ளது. அங்குள்ள நான்கு எழுத்தோவியங்களினின்றும் எடுக்கப்பெற்ற சில முக்கியப் பகுதிகள் உட்புறச்சுவர்களில் பொறிக்கப் பெற்றுள்ளன. கட்டடத்தைச் சுற்றிலும் ஜப்பானின் செர்ரி மரங்கள் வளர்க்கப் பெற்றுள்ளன.

(11) லிங்கன் நினைவுச் சின்னம்': [1]முதல் தரமான கிரேக்க பாணியிலமைந்த கோயில் இது. அமெரிக்கத் தலைவர் ஆப்ரஹாம் லிங்கனின் முகபாவனைகளை விளக்கும் பான்மையில் 19-அடி சலவைக் கல்லாலான சிலை ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. இது டேனியல் செஸ்டர் ஃபிரஞ்சு[2] என்பவரால் நிறுவப் பெற்றதாகும். அவருடைய கெட்டிஸ்பாக் சொற்பொழிவும்[3], இரண்டாவது தொடக்க உரையும் உட்புறச்சுவர்களில் பொறிக்கப் பெற்றுள்ளன. பார்வையாளர்கள் மையம் நாள்தோறும் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும்.

(12) வெள்ளை மாளிகை’ [4]முதல் தலைவர் ஜார்ஜ் வாஷிங்க்டனால் தேர்வு செய்யப்பெற்ற இடத்தில் கட்டப்பெற்ற இந்த மாளிகை ஜான் ஆடம்ஸ் என்பார் (1800) தொடங்கி எல்லாத் தலைவர்களின் அலுவலக வாழ்விடமாக இருந்து வரும் இது 202 ஆண்டு பழைய கட்டடம். ஜேம்ஸ் ஹோமன்’[5] என்ற ஐரிஸ் கட்டடக்கலை வல்லுநரால் திட்டமிடப் பெற்றது. இதில் வாழ்ந்த ஒவ்வொருவராலும் சேகரிக்கப்பெற்ற பல்வகைப் பொருள்களைக் கொண்டது. செவ்வாய் முதல் சனிவரை முற்பகல் 10 மணி தொடங்கி மதியம் வரை திறந்திருக்கும். இதன் 132 அறைகளைப் பார்வையாளர்கள் இலவசமாகப் பார்க்கலாம். வெள்ளை மாளிகை வரலாறு பற்றிய திரைப்படங்களும் காட்சிப் பொருள்களும் பார்வையாளர்கட்குக் காட்டப்பெறும். வெள்ளைமாளிகை பார்வையாளர் மையத்தில் (1450 பென்சில்வேனியா அவின்யு) நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பெறும்.

(13) வியட்நாம் நீண்டகாலப் போர்த்துறைப் பணியாளரின் நினைவுச்சின்னம்':[6] ‘v’ வடிவத்தில் அமைந்த இச்சின்னம் கறுப்புக் கல்லினால் ஆனது. வியட்நாம் போரில் மடிந்த அல்லது தவறிப்போன 58,000 வீரர்களின் பெயர்கள் இச்சின்னத்தில் பொறிக்கப் பெற்றுள்ளன. இச்சின்னத்தின் அருகில் வியட்நாம் மகளிர் சின்னமும் அமைந்துள்ளது.


  1. 17. Lincoln Memorial
  2. 18. Daniel Chester French
  3. 19. Gettysberg address
  4. 20. White House
  5. 21. James Homan
  6. 22. Vietnam Veterans Memorial