பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பலமுறை சென்று வந்தாலும், செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த நாட்டில் நவ நவமாய் மலரும் மாறுதல்களைக் கண்டு எவரும் வியப்படைவார்கள்.

நிறைவாகத் திரு. சுப்பு ரெட்டியார், “என் மகன் நிரந்தரமாகவே வந்து என்னைத் தங்குமாறு வற்புறுத்தினான். மிகவும் குளிர்ப்பகுதியாக இருக்கும் நியூயார்க் மாநிலத்தை விட்டு அரிசோனா மாநிலத்துக்குக் குடியேறிவிட்டான். அங்குத் தமிழகச் சூழ்நிலை (வெப்பம்) இருக்கும் என்றும், மருத்துவ வசதி அமெரிக்காவில் இருப்பதுபோலத் தமிழகத்தில் இல்லையென்றும், 19 எண்ணுள்ள தொலைபேசியை இயக்கினால் நோயாளர்க்குரிய பேருந்து உடனே வந்து அனைத்தையும் கவனிக்கும் என்றும் கூறினான். ‘முறைவழிப்படும் ஆருயிரை - உயிரீரும் வாளை’- மருத்துவத்தால் காப்பாற்ற முடியுமா? என்ற வினா எனக்கு எழுகின்றது. ஏதோ அவசரத்துக்குத் தமிழகத்தில் நான் வாழும் சென்னை அண்ணா நகரில் கிடைக்கும் மருத்துவ வசதி போதும் என்று எனக்குத் தோன்றுகின்றது.”

இளமை முதல் இன்று வரை (அகவை 88-க்குப் புகும் நிலை) சுறுசுறுப்பாகப் படிப்பதும், எழுதுவதும், ஆர்வத்துடன் இருப்பவர்களுக்குக் கல்வி புகட்டுவதும், ஆய்வுக்கு வழிகாட்டுவதும் - இத்தனைக்கும் மேலாக “பணியே பரமன் வழிபாடு” என்றும், அது எனக்குப் “பண்டே பரமன் பணித்த பணிவகையே” (திருவாய் 10.4:9) என்று இடைவிடாது எண்ணியிருக்கும் எனக்கு அமெரிக்க வாழ்வு எப்படிப் பொருந்தும்? “புத்தம் புதிய நூல்கள்தாம் தமிழ்மொழிப் பன்முக வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்பதும், அதுவே என் பேச்சாகவும் மூச்சாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடித்துக்கொண்டு வாழும் எனக்குத் தமிழக வாழ்வுதான் மிகவும் பொருத்தம் என்பதும் வெள்ளிடைமலை” என்று நூலை முடித்துள்ளார். அவருடைய முடிவு நல்ல முடிவாகும்.

பயனுடைய ஒரு பயண நூலைப் பேராசிரியர் எழுதியதைப் பாராட்டிப் போற்றுகிறேன். அல்லும் பகலும் தமிழ்த் தொண்டாற்றும் பெரும் பேராசிரியர் இன்னம் பல்லாண்டு வாழ்ந்து பணிகளைத் தொடரவேண்டும் என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவனை வேண்டுகிறேன்.

அன்புள்ள
நா. மகாலிங்கம்