பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 ♦ என் அமெரிக்கப் பயணம்


1. அடுப்பு எரிவாயு:நம்மூர்களில் உள்ளது போல் சிலிண்டர்கள் இங்கு இல்லை. குழாய் மூலம் எரிவாயு அடுப்புக்கு வருகிறது. வீட்டுக்கு வெளியில் நுழைவாயிலின் அருகில் அளவுகருவி உள்ளது. மாதந்தோறும் அதில் பதிந்து பில் அனுப்புவார்கள். நாம் காசோலை மூலம் தொகை அனுப்பவேண்டும்; பற்றுச்சீட்டு அஞ்சலில் வரும்.

2. மின்சாரம்: நம் ஊரில் உள்ளது போலவே மாதந்தோறும் மின்சாரம் செலவான அளவு பதிந்து கொண்டு சென்று பில் அனுப்புவார்கள்; நாம் காசோலை மூலம் தொகை அனுப்ப வேண்டும்; பற்றுச்சீட்டை அஞ்சலில் அனுப்புவார்கள்.

3. வீட்டுவரி: அறிவிப்பு வந்தவுடன் காசோலை மூலம் தொகை அனுப்பிவிடலாம்.

4. குடும்ப வாழ்க்கை: நான் நேரில் கண்டவரையில், உசாவி அறிந்தவரையில் அமெரிக்காவில் பெரும்பாலோரின் குடும்ப வாழ்க்கை சரியாக இல்லை. பெற்றோர்கட்கும் பிள்ளைகட்கும் இடையே பாசமும் பிணைப்பும் இல்லை. பால் மறந்து கொம்பு தோன்றும் நிலையில் தாயை விட்டுக் கன்றுகள் பிரிந்து செல்வதுபோல, ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் 12-ம் அகவைகளிலேயே பிரிந்து போகின்றனர். அவர்களே கல்வியையும் வேலையையும் தேடிக் கொள்கின்றனர். பிஞ்சிலே பழுத்து, படிக்கும் போதே பெற்றோர்களாகின்றனர். இந்த நிலையில் இவர்கள் படித்து அறிஞர்களாகத் திகழ்வது குதிரைக் கொம்பாக அமைகின்றது. இதனால் இந்தியா போன்ற அயல்நாடுகளினின்றும் அலுவல் பார்ப்பவர்கள் திறமைசாலிகளாகவும் ஒழுங்குள்ளவர்களாகவும் திகழ்கின்றனர்.

அமெரிக்க மக்களிடையே சொத்து சேமிப்பதில் கவனம் இல்லை; சம்பாதிப்பது முழுவதையும் பலவழிகளில் கொட்டித் தீர்த்து விடுகின்றனர். குடும்பப்பிணைப்பு, பாசம் முதலியவை இல்லாமையே இப்போக்கிற்குக் காரணம் என்று கருதலாம். இதனால்தான் முதியவர்க்குரிய மருத்துவமனைகளில் சேர்ந்து விடுகின்றனர். ஈமச்சடங்கை அவரவர் விருப்பப்படி செய்து கொள்ள வாய்ப்புகளும் உண்டு என்பதை மேலே குறிப்பிட்டதை நினைவு கூரலாம்.

5. செல்லப்பிராணிகள்: பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளிடம் அமெரிக்க மக்கள் காட்டும் அன்பும் பாசமும் அதிகம். அவற்றின் பராமரிப்பில் அவர்கள் காட்டும் அக்கறையும் ஆர்வமும் சொல்லிமுடியா. அமெரிக்காவில் பெற்றோர்கட்குப் பிள்ளைகளாகப் பிறப்பதைவிட செல்லப்பிராணிகளாக பிறக்கக்கூடாதா என்ற கருத்து புத்தி கூர்மையுள்ள பிள்ளைகளிடம் தோன்றத்தான் செய்யும்.