பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொதுச் செய்திகள் ♦ 7


6. செய்தித்தாள்கள்: நியூயார்க் நகரில் மட்டும் 11 ஆங்கில, பிறநாட்டு மொழிகள் கொண்ட செய்தித்தாள்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலத்தில் வெளியாகும் தாள்களில் NewYork Daily News, New York Post, New-York Times முக்கியமானவை. India weekly-USA என்ற வார இதழும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் விரிவாக இதில் வெளிவருவதைக் கண்டுமகிழலாம். அண்மையில் ‘ஏ.பி.ஜே.அப்துல்கலாம்’ என்ற உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் இந்தியக் குடியரசுத் தலைவராக வருவதற்கு பெயர் குறிப்பிடப் பெற்றதையும், அவர் ஏகமனதாக தேர்ந்தெடுப்பதைப் பற்றியும் அறிஞர்கள் ஆய்வு செய்வதையும் விவரமாக வெளியிடப் பெற்றதை (ஜூன் 16, 2002), அமெரிக்க வாழ் இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ந்ததை அறிவோம். India Abroad என்ற தாள் ஒன்று வெளிவருவதைக் கேள்வியுற்றேன். நான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. India in New York, India Tribune (Periodical) என்ற இதழ்களும் இந்தியா பற்றிய செய்திகளுக்கு முதலிடம் தருகின்றன.

7.அபூர்வச் செய்திகள்: (அ) என் மகன் இருக்கும் இல்லத்தின் பின்புற இல்லத்தில் ஒரு முதியவர் இருந்தார். அவர் தோட்டத்தில் ஒரு பேரிக்கா மரம். அதில் சுமார் 30 புறாக்கள். அவற்றிற்குத் தினந்தோறும் தீனி போடுவர். மரத்தின் கிளைகளில் பல பிளாஸ்டிக்காலான சிறு கிண்ணம் போன்ற அமைப்புகளில் அவை நீர்பருக நீர்நிரப்பி வைப்பதுண்டு. புறாக்கள் அதனைப் பருகும். இங்ஙனம் புறாக்களை பராமரித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தார். அவர் இறக்கும் தறுவாயில் என் மகன் வாழும் இல்லத்தின் உரிமையாளரிடம் புறாக்களின் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் (அவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, தளர்ந்த நிலை; இருதய நோயாளி). அவரால் ஒழுங்காகக் கவனிக்க முடியவில்லை. அதனால் புறாக்களின் தொகை குறைந்து கொண்டே சென்றது; அவரது இல்லத்தின் முதல் அடுக்கில் வாழும் என் மருமகள் தினந்தோறும் இரண்டு வேளைகளில் பலகணியின் வெளிப்புறத்தில் உணவு வைப்பது வழக்கம். எங்கெங்கோ சுற்றி அலையும் புறாக்கள் வந்து தின்கின்றன. புறாக்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றது.

2002, ஜூலை 15-ந் தேதி க்கு மேல் என் மகன் அரிசோனா மாநிலத்தில் பெரிய வேலைகிடைத்து அங்குப் போகின்றான். மாடிப் பகுதிக்கு யாரோ ஒருவர் குடியேறலாம். அவர் உணவு வைக்காவிடில் புறாக்களின் கதி ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.