பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொதுச் செய்திகள் ♦ 11

நியுயார்க் மாநகரப் போக்குவரத்து மிகக்குறைந்த செலவில் அதிகத் தொலைவுப் பயணம் செய்ய வசதி வாய்ப்பு அளிக்கிறது. 1½ டாலர் அடையாளச் சீட்டு 237 மைலுக்குமேல் சுரங்க இருப்பூர்திகளில் பயணம் செய்ய வாய்ப்பு அளிக்கிறது. சுரங்க இருப்பூர்திகள் அதிவேகமாகவும் இயங்குகின்றன. ஒவ்வொரு நிலையங்களிலும் படங்களுடன் விளக்கக் குறிப்புகள் வைக்கப்பெற்றுள்ளன. சிலநிலையங்களில் உள்ளூர் இருப்பூர்திகளும் அதிவேக இருப்பூர்திகளும் இயங்குகின்றன. அநுபவம் இல்லாத பயணிகள் உள்ளூர் ஊர்திகளில் தான் ஏற வேண்டும். அதிவேக ஊர்களில் ஏறித் தாம் இறங்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டுத் தொல்லைபடலாகாது. உள்ளூர் ஊர்திகள் அனைத்து நிலையங்களிலும் நிற்பதால் தாம் இறங்க வேண்டிய நிலையத்தைத் தவறிப் போகவிட்டுவிட நேரிடுவதில்லை.

நியுயார்க் பெருநகரில் மட்டும் 210 பேருந்துப் பயனவழிகள் உள்ளன. சரியான சில்லறைகளை வைத்துக் கொண்டால் பேருந்துப் பயணங்கள் எளிதாக அமையும்.

5. வேலை நிறுத்தம்: நல்ல வசதிகளுடன் இயங்கும் பேருந்துகள், சில சமயம் பேருந்து தொழிலாளர்கள் கடைப்பிடிக்கும் வேலை நிறுத்தங்களால் இயங்காமையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எடுத்துக்காட்டாக நாங்கள் வாழும் குயின்ஸ்பரோவிலுள்ள பேருந்துகள் நான்கு ஐந்து நாட்களாக ஓடவில்லை. பேருந்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம். அரசு நிர்வாகத்தினரின் அதிகாரச் செறுக்கும், கூட்டம் போட்டு குழப்பங்களை விளைவிக்கும் தொழிலாளர்களின் இறுமாப்பும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றது. தமிழகத்தில் இத்தகைய நிலைகளை அடிக்கடிக் காண்கின்றோம். ஆனால், நல்ல ஆட்சி முறையும் நல்ல தொழிலாளர்கள் நலமும் நிலவும் அமெரிக்காவில் ஏன் இந்த நிலை ? என்பதுதான் என்னை வியக்கவைக்கின்றது; மலைக்கவும் செய்கின்றது.