பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமெரிக்க ஐக்கிய நாடுகள் ♦ 13


வாஷிங்டன் (டி.சி) என்பது நமது டில்லிபோல தனியாக இயங்குவது. அதிபர் புஷ் தங்கியிருப்பது வெள்ளைமாளிகையில் தான் என்பது நினைவில் இருத்தல் தக்கது.

இந்த 50 மாநிலங்களில் 40 மாநிலங்களில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் சூழ்நிலை திகழ்ந்து நாநிலவளத்தை அம்பலப்படுத்துகின்றது. 10 மாநிலங்களில் மட்டும் செழிப்பற்ற (பாலையல்ல) சூழ்நிலை நிலவுகிறது.

நியுயார்க் மாநகர்: நியுயார்க் மாநிலத்தின் பெருநகரம் இது. தலைநகர் ஆல்பனி[1]. வெளிநாட்டார் அமெரிக்காவை நினைக்கும்போது இப்பெருநகர்தான் அவர்தம் மனத்தில் முன் நிற்கும். அமெரிக்கர்களும் சில அரும் பொருள்களை வாங்க இம் மாநகருக்கு வருவார்கள்.இங்குள்ள மக்கள் தொகை ஒரு சதுர மைலுக்கு 23,320 பேர் என்பர். இந்நகரின் 17 விழுக்காட்டு நிலம் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் நிறைந்தது. அருங்காட்சியகங்கள், கலைக் கூடங்கள், திரையரங்குகள் நிறைந்த பலலட்ச மக்கள் தொகையைக் கொண்டது இப்பெருநகர்.

நியுயார்க்கின் துறைமுகம் உலகத்துறைமுகங்களில் அற்புதமானது; அழகானது. இத்துறைமுகத்தின் எடுப்பான காட்சிப் பொருள் சுதந்திர தேவியின் அற்புதச்சிலை. நியுயார்க் துறைமுகம் மிகச் சுறுசுறுப்பாக இயங்கும் உலகத் துறைமுகங்களில் ஒன்று. இந்நகர் ஒரு பெரிய இருப்பூர்தி மையத்தையும் இலங்குவது; தொழிற்சாலைகளும் நிறைந்தது. இங்கு விளைவிக்கப்பெறும் பொருள்கள் இந்நகரை உலகிலேயே ஒரு பெரிய வாணிக மையமாகத் திகழ வைக்கின்றன.

இம்மாநகரைத் தன்னகத்தே கொண்டது ஐம்பது மாநிலங்களில் ஒன்றானதும் மிக புகழ் பெற்றுள்ளதுமான நியுயார்க் மாநிலம். இம்மாநகர் ஐந்து பெரும் பிரிவுகளைக்[2] கொண்டது. அவை பிராங்க்ஸ்[3], புரூக்லின்[4], மான் காட்டன்[5], குயூன்ஸ்[6], ஸ்டேட்டன்தீவு[7]. ஜமைக்கா என்பது ஒரு சிறுபகுதி. சென்னையில் அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர், என்பன போன்றது. இது தான் என் மகன் டாக்டர் இராமகிருஷ்ணன் வாழிடம் நான் தங்கியிருந்த இடம். மான்காட்டன், குயின்ஸ், புரூக்லின் என்ற மூன்றும் தீவுகள்; புரூக்லின் பாலத்தால் இணைக்கப் பெற்றுள்ளன. மான்காட்டனின் ஒரு புறம் ஹட்சன் ஆறும், மறுபுறம் ஈஸ்டு ஆறும் சூழ்ந்துள்ளன. ஸ்டேட்டன் ஐலாந்து ஒரு தனித் தீவு. கடலால் சூழப்பெற்றுள்ளது. பிராங்க்ஸ் தீவற்றபகுதி. பிராங்க்ஸின் ஒரு பகுதி 1874-லும் மற்றொருபகுதி 1895-லும் நகருடன் இணைக்கப்பெற்றன.


  1. Albani
  2. Boroughs
  3. Bronx
  4. Brooklyn
  5. Manhattan
  6. Queens
  7. Staten Island