பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 ♦ என் அமெரிக்கப் பயணம்

1883-இல் புரூக்லின் பாலம் கட்டப்பெறும் வரை புரூக்லின் பகுதி தனியாகவே பிரிந்து கிடந்தது. 1898-இல் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி புரூக்லின் ஒரு பிரிவாக நியுயார்க்குடன் இணைந்தது.

மான் காட்டன் பகுதி, இந்த ஐந்து பகுதிகளிலும் மிகப் பழமையானதும் மிகச் சிறியதுமானதுமாகும். குயின்ஸ் ஒரு சிறு நகரமாக 1683-இல் உருவாக்கப்பெற்றது. இதன் மேற்குபகுதி 1898-இல் இம்மாநகருடன் இணைந்தது. ரிச்மண்ட் (ஸ்டேட்டன் தீவு) ஆதியில் ஸ்டேட்டன் அய்லாந்து என்ற பெயரால் வழங்கியது. இது நெதர்லாந்தின் நிர்வாக சபைக்கும் (States General) பெருமை சேர்க்கும் வகையில் இவ்வாறு வழங்கப் பெற்றது.

பெரும்பாலான பெருநகரங்களில் பாலங்களும் சுரங்கப்பாதை[1]களுமே வாகனப் போக்குவரத்தை விரைவாக இயங்கச் செய்கின்றன. இவற்றுள் ஒன்று வெரஸ்ஸோனா நேரோஸ் பாலம்[2]. இது ஒரே வளைவுள்ள பாலத்தில் உலகில் இரண்டாவது. மற்றொன்று ஆலந்து சுரங்கப்பாதை[3], 1927-இல் இதன் வேலை நிறைவேற்றப்பெற்றது. அதன் பொறியியல் செய்திறன் வியத்தகு திறனில் ஒன்றாக இருந்தது. புரூக்லின் பேட்டரி சுரங்கப்பாதை உலகப் பெரும்பாதைகளில் உலகில் மிக மிக நீண்டவற்றில் ஒன்றாகும்; அங்ஙனமே பேயொன் பாலம்[4]. மிகநீண்ட உருக்கு இரும்பாலான வளைவுகளாலமைந்த பாலங்களில் ஒன்றாகும். புரூக்லின் பாலம் யாதொரு ஐயமுமின்றி அனைவரும் அறிந்த ஒன்று. இதனை ஏமாந்த சோணகிரிகளுக்கு இஃது அற்புதங்களில் ஒன்று என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் தில்லுமுல்லுகாரர்களின் வேடிக்கைப் பொருளாக இருந்து வந்தது என்பதை இன்னும் மக்கள் மறக்கவில்லை.

இன்று மான்காட்டனும், புரூக்லினும் பல்வேறு அம்சங்களில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் மிகப்பெரிய பிரிவுகளாக விரிந்து விட்டன. ஸ்டேட்டன் தீவும் நம் கவனத்தை ஈர்க்கின்றது. எல்லா பிரிவுகளும் பலதிறப்பட்ட அம்சங்களில் நம் கவனத்தை ஈர்க்கத்தான் செய்கின்றன.

மான்காட்டன்-புரூக்லின் இரண்டும் பல முக்கிய பகுதிகள் அடங்கிய இடங்களாதலால் ஒரு நாள் ஏப்ரல் 8, திங்கள் அன்று இந்த இரண்டு பரோக்களையும் பார்த்து வரலாம் என்று என் மகன் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் எங்களை அழைத்துச் சென்றான். அனைத்தும் பார்க்க வேண்டியவை என்றாலும் முக்கியமானவை சிலவற்றை மட்டும் பருந்து நோக்காகப் பார்க்க முடிந்தது. அவற்றை ஈண்டுத் தெரிவிப்பேன்.


  1. Tunnel
  2. Verrazano–Narrous Bridge
  3. Holland Tunnel
  4. Bayonne Bridge