பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை
1. திருக்கோயில்கள்

என் அமெரிக்கப் பயணத்தில் நான்கு திருக்கோயில்கட்குச் சென்றுவர வாய்ப்புகள் நேரிட்டன. அவைபற்றிய விவரங்களை ஈண்டுக் குறிப்பிடுகின்றேன்.

1. கணபதி கோயில்: மார்ச்-30, சனிக்கிழமை காலை11.30-க்கு என் மகன் இல்லத்திற்கு அண்மையில் (நான்கு கல் தொலைவு) உள்ள இத்திருக்கோயிலுக்குக் காரில் சென்று வந்தோம். அமெரிக்காவில் சற்றேறக்குறைய மூன்று திங்கள் தங்கியிருக்கப் போகும் அடியேனுக்கு முதன் முதலாகக் கிடைத்த விநாயகர் தரிசனம் கிடைத்தற்கரிய பெரும் பேறாகத் தோன்றுகின்றது. இத்திருக் கோயிலின் முதல் தெய்வமான விநாயகரை,

காலைப் பிடித்தேன் கணபதி!
       நின்பதம் கண்ணி லொற்றித்
நூலைப் பலபல வாகச்
       சமைத்து நொடிப் பொழுதும்
வேலைத் தவறு நிகழாது
       நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின்
       நிறுத்தல் குறியெனக்கே

- பாரதியார் விநா, நான்மணி-22

என்ற பாடலை ஓதி உளங் கரைந்து உருகி வழிபடுகிறேன்.

அடுத்து என் உள்ளத்தைக் கொண்டு என் இதய கமலத்தில் நிரந்தரமாக எழுந்தருளியிருந்து எனக்கு நல்வழி காட்டிவரும் எம் பெருமான் திருவேங்கடவனை,

‘அகல கில்லேன் இறையும்’ என்று
       அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில்புகழாய்! உலகம் மூன்று
       உடையாய்! என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்க ணங்கள்

       விரும்பும் திருவேங் கடத்தானே!