பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 31

தீபாராதனைத் தட்டில் நாம் நம்மூரில் பணம் போடும் வழக்கம் உள்ளது. அந்தப்பணம் நம்மூரில் அர்ச்சகரைச் சேரும். இங்கு அந்தப் பணத்தை அய்யர் எடுத்துக் கொள்வதில்லை. அவர்தட்டில் சேரும் தொகைகளைச் சந்நிதிக்கு முன் வைக்கப் பெற்றுள்ள உண்டியில் சேர்த்து விடுவார். இந்த நடைமுறை ஏன் என்று வினவியதற்கு அவர் நல்ல மாத ஊதியம் பெறுவதால் இத்தொகைகளை அவர்எடுத்துக் கொள்ளக்கூடாது என்று விதிமுறைகள் இருப்பனவாக அறிந்தோம்.

பேருந்து வசதிகளைப் பார்ப்பதற்கென்றே இம்முறை பேருந்தில் சென்றோம். ஒட்டுநர் ஒருவரே. நடத்துநர் என்ற வேறொருவர் இங்கு இல்லை. கட்டணத்துக்குரிய தொகையை ஓட்டுநர் அருகில் வைக்கப்பெற்றுள்ள அமைப்பில் போட்டுவிட்டு நாம் இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். பாஸ் வைத்திருப்பவர்கள் பாஸை அந்த அமைப்பில் செருகினால் அதில் குறியிட்டு மேலே வரும் நாம் எடுத்துக் கொண்டு இருக்கைக்குப் போகலாம். கூட்டம் அதிகமாக இருக்கும்போது நிற்பதற்கும் பிடிகள் பொருத்தப்பெற்றுள்ள வசதிகள் உள்ளன. வண்டி நின்றவுடன் இருமுனைகளிலும் உள்ள கதவுகள் தாமாகத் திறக்கும். ஏறும் முனையிலுள்ளவர்கள் தொகையைப் போட்டுவிட்டு இருக்கைக்குப் போவார்கள்; இதே முனையிலும் சிலர் இறங்குவார்கள். பெரும்பாலும் இறங்கும் முனையிலுள்ள வழியிலேயே இறங்குவார்கள். பயணிகள் இறங்கியதும் இரு முனைகளிலுள்ள கதவுகள் தாமாக மூடிக் கொள்ளும். இங்குள்ள பேருந்து வசதி முறை என் மனத்தை மிகவும் கவர்ந்தது.

அண்மையில் உள்ள கோயிலானதால் பலமுறை சென்று வரும் வாய்ப்புகள் இருந்தன. விநாயகரும் ஏழுமலையானும் என்னை அதிகமாக ஈர்த்தனர்.

நியுயார்க் ரீமகா வல்லப மகாதேவஸ்தான ஆதரவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை

மே மாதம் 11 சனியன்று மாலை 5 மணிக்கு நியுயார்க் நகர் ஸ்ரீமகா வல்லப மகா கணபதி தேவஸ்தான ஆதரவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் என் நண்பர் டாக்டர் அம்பத்தி எம். ராவ்.[1] இவர் என் மாணவி கோமதியின் (திருப்பதியில்) கணவர். பேசவேண்டிய பொருள் வைணவ. ‘சைவ தத்துவங்கள்-ஓர் ஒப்பீடு’ என்பது. பேச்சின் சாரம் ஈண்டுத் தரப்பெறுகின்றது.


  1. என்னைப்பற்றிய குறிப்பு தயாரித்து கூட்டத்தில் வினியோகம் செய்தவிவரம் பின்னிணைப்பு-2 இல் தரப் பெற்றுள்ளது.