பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 35

பிள்ளையாரும் அச்சிறு வயதிலேயே அவனது மனமுதிர்ச்சியை அறிந்து அவனுக்கு அனைத்துக் கலைகளையும் உபதேசித்தார். நம்பியும் சிறந்த ஞானியானார். இது நம்பியாண்டார் நம்பி பற்றிய வரலாறு. இஃதுடன் இது நிற்க.

திருவாரூரில் சோழப் பேரரசன் அபயகுலசேகரன் என்ற இராஜராஜ சோழன் தம் அவைக்களத்தில் உள்ள சிவனடியார்கள் மூவர் பாடிய தேவாரப் பதிகங்களுள் தமக்குத் தெரிந்த ஒவ்வொரு திருப்பதிகத்தையே ஓதக் கேட்க நேரிடுகின்றது. அதன்படி மூவர் தேவாரம் பல்கிப் பெருகிக் கிடக்கும் செய்தியை அறிகின்றான். எங்கும் தேடியும் அப்பக்திச் செல்வம் கிடைக்கவில்லை. நம்பியாண்டார் நம்பியின் அற்புதப் பிள்ளையாரின் வழிபாட்டு வரலாறு அவன் செவிக்கு எட்டுகின்றது. ஏராளமான கொழுக்கட்டைகளைக் கொண்டுவந்து நம்பியாண்டார் நம்பியின் முன் சமர்ப்பித்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்வித்து உண்ணச் செய்வித்து தேவாரச் செல்வம் இருக்குமிடத்தைத் தெரிவித்து வழிகாட்டுமாறு வேண்டச் செய்தான். கொழுக்கட்டைகளையெல்லாம் உண்டு மகிழ்ந்த விநாயகப் பெருமான் “தேவாரச் செல்வத்தை மூவர் முதலிகள் சிதம்பரம் கோயிலின் மேற்குக் கோபுர வாயிலின் மேல் மாடியில் வைத்துள்ளனர்” என்று தெரிவிக்க, அரசனும் மட்டற்ற மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கின்றான். நம்பியாண்டார் நம்பியை இட்டுக் கொண்டு கோயிலை அடைகின்றான். நம்பியாண்டார் நம்பி தீட்சிதர்களை நாடி மாடியைத் திறந்து காட்டுமாறு வேண்டுகின்றார். “இச்செல்வத்தை மூவர் முதலிகள் வைத்துச் சென்றனர். அவர்கள் வராமல் மாடியைத் திறக்க முடியாது” என்று சொல்லி மறுத்துவிட்டனர்.

‘பாம்பின் கால் பாம்பு அறியு’மல்லவா? தீட்சிதர்களின் பணத்தாசையை அறிந்து கொண்டு விடுகின்றார் நம்பிகள். அரசனைக் கொண்டு தீட்சிதர்கள் மனம் உகக்குமாறு “சம்பாவனைகள்” செய்வித்தார். மூவர் முதலிகளின் திருமேனிகளைச் சப்பரத்தில் எழுந்தருள்வித்து திருவுலாவரச்செய்து கோபுர வாயிலில் கொண்டு வந்து நிறுத்தி “தீட்சிதர்களே, மூவர் எழுந்தருளியுள்ளனர். மேல் மாடியின் திருக்காப்பு நீக்குவீர்களாக” என்று நம்பிகள் கேட்டுக் கொண்டபடி தீட்சிதர்கள் திருக்காப்பு நீக்கி சுவடிகளைப் பார்க்க அனுமதி வழங்கினர். நம்பியாண்டார் நம்பி அவற்றை எடுத்துப் பார்த்ததில் பெரும்பாலான பகுதி கரையானுக்கு இரையாகி இருந்தது. அரசன், நம்பிகள் உட்பட அனைவரும் மனங் கவன்றனர். “இக்காலத்துக்குத் தேவையானவை மட்டும் உள்ளன” என்று அசரீரி மூலம் அனைவரும் கேட்டனர்; சமாதானம் அடைந்தனர்.