பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 ♦ என் அமெரிக்கப் பயணம்

மூலப்பிரகிருதி-1 ஆக தத்துவங்கள் 24; இவற்றுடன் ஆன்மா (புருஷன்), பரமான்மா (புருஷோத்தமன்) சேர வைணவ தத்துவம் 26 ஆகின்றது.

3. சத்துவசூனியம்: இதுவே காலத்துவம். இது நிமிடம், நாழிகை முதல் பரார்த்தம் வரையிலுள்ள பகுதிகளைக் கொண்டது.

அண்டங்கள் 14. கீழ் அண்ட கபாலத்தின் மேல் இருப்பது ‘கர்ப்போதகம்’. இதன்மேல் அதலம், விதலம், நிதலம், தராதலம், மகாதலம், சுதலம், பாதலம் என்ற ஏழு உலகங்கள் அடங்கும். இவற்றிற்கு மேல் நாம் வாழும் பூலோகம் அமைந்துள்ளது. இதற்கு மேல் புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனர்லோகம், தபோலோகம், சத்தியலோகம் என்ற ஆறு உலகங்கள் உள்ளன.

சைவம்:

பாசம் (1) ஆணவம், (2) கன்மம், (3) மாயை. மூவகை உயிர்களின் பொருட்டு உலகங்களும் மூவகையாக உள்ளன.

(1) சுத்தப்பிரபஞ்சம்: விஞ்ஞானகலருக்கு உரியது.

(2) மிச்சிரப்பிரபஞ்சம்: பிரளயாகலருக்கு உரியது.

(3) அசுத்தப்பிரபஞ்சம் சகலருக்கு உரியது.

இவை மிகச் சிக்கலாகப் போகின்றன விளக்குவது கடினம்.

இங்கு ஆன்மதத்துவங்கள் 24; விவரம்; அந்தக்கரணங்கள் (சித்தம், புத்தி, அகங்காரம், மனம்) 4, ஞானேந்திரியங்கள் 5, கன்மேந்திரியங்கள் 5, தந்மாத்திரைகள் 5, பூதங்கள் 5 ஆக 24. தத்துவம் 36.

அண்டங்கள் 14. அண்டங்களுக்குப் பிரமாண்டம்’ என்று பெயர் (பிரமம்-பெரியது). நாம் வாழும் பிரம்மாண்டத்தின் நடுப்பகுதி பூமியின் மேற்பரப்பாகும். இதுவே ‘பூலோகம்’ எனப்படுவது. இதன் கீழே அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதலம் என்கின்ற ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றின் கீழே பாவிகள் சென்றடையும் 28 கோடி நரகங்கள் உள்ளன.

பூலோகத்தின் மேல் புவலோகம், சுவலோகம், மகலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம் என்னும் ஆறு உலகங்கள் உள்ளன

ஈசுவரன்: வைணவத்தில் சீமந் நாராயணனே முதற் கடவுள். கம்பன் மூலபலவதைப் படலத்தில் கூறுவது. ‘பிரளயகாலத்தில் அனைத்தையும் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டு ஆலிலையில் பள்ளி கொண்டிருப்பதாகக் கூறுவன். இதுவே நாராயணன் முதற் கடவுளாக இருப்பதற்குச் சான்று’ என்பது.