பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ♦ என் அமெரிக்கப் பயணம்

பிறந்த பிள்ளைக்கு ‘சித்தார்த்தன்’ என்று பெயர் இடப் பெறுகின்றது. ‘சித்தத்தின் நோக்கம் நிறைவு பெற்றவன்’ என்பது இதன் பொருள்.

சித்தார்த்தன் செல்வச் சிறப்பில் மிகச் செல்லமாக வளர்ந்து வருகின்றான். தன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பிற்கு மேல் அறிவுடைமையும் இயல்பான திறன்களும் இயற்கை அருளியவை. இவன் தந்தையார் தமக்குப் பிறகு அரச பதவி பெற்று நாடாள வேண்டும் என்று கனவு கண்டார். உலகத் துன்பங்களும் இடர்களும் அவன் கண்ணில் படாமல் வளர்க்கப் பெற்றான். ஆனால், இந்நிலையில் அவன் வாழ்க்கையைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்ள விரும்பினான். அரண்மனைக்குப் புறம்பே உள்ள உலகைப் பார்க்க அவன் வந்தபோது நோயாளி ஒருவன், முதியோன் ஒருவன், ஒரு பிணம், ஒரு சந்நியாசி ஆகிய நான்கினையும் பார்க்க நேரிட்டது. இதனால் அவனிடம் துக்கமும் மக்கள்மேல் பரிவும் மீதூர்ந்து நிற்கின்றன. இதனால் தன் அன்பு மனைவி, மகன் அரண்மனை சுகம் ஆகியவற்றைத் துறந்து, இத்தகைய துன்பங்களிலிருந்து மீள வழிகான இல்லத்தைவிட்டு வெளியேறுகின்றான். அவனது 29-ஆம் அகவையில் இச்சம்பவம் நேரிடுகின்றது. தான் காண நேரிட்ட துறவிகளின் முறைகளையொட்டி தன்னை வருத்திக் கொள்ளல், தான் நுகரும் இன்பங்களைத் துறத்தல் ஆகியவற்றை ஆறாண்டுகள் கடைப்பிடிக்கின்றான். இறுதியாக, எவ்வளவு இடருற்றாலும், தன்னுடைய ஆருயிரையும் பணயம் வைத்து தன்னுடைய நோக்க எல்லையை அடைய உறுதி பூணுகின்றான். இந்த நோக்கத்தை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளினால் புத்தன் ஆகின்றான்.

கி.மு. 578-ஆம் ஆண்டு மே மாதம் பெளர்ணமியன்று கயை என்ற இடத்தில் (பீகார் மாநிலம்) தம்முடைய விடாமுயற்சியாலும் மனவுறுதியாலும் கெளதமர் பூர்ண ஞானம் பெற்று அநுபூதிநிலையில் நான்கு உண்மைகளைக் காண்கின்றார்.

திருக்கோயிலை அடைந்த நாம் சாலையில் கார் நிறுத்த வேண்டிய இடத்தில் காரை நிறுத்தி விட்டுத் திருக்கோயிலை அடைகின்றோம். திருக்கோயிலுக்கு வெளியே சிதையாலான புத்தரின் திருவுருவத்தைக் காண்கின்றோம்; புத்துணர்ச்சியும் மனக்கிளர்ச்சியும் அடைகின்றோம். அன்பும் கருணையும் பொலியும் அழகான புத்தரின் திருமுகம் அமைய வேண்டிய முறையில் அமையாதது சிறிது வருத்தத்தைத் தந்தது. அடுத்து, திருக்கோயிலினுள் புகுகின்றோம். நுழைவாயிலின் உட்புறம் ஆண்களும் பெண்களும் மிதியடிகளை விடுவதற்குத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப் பெற்றிருந்தன. அவ்விடங்களில் மிதியடிகளை விட்டுவிட்டு முதல் மாடியில் பகவான்புத்தர் எழுந்தருள்விக்கப் பெற்றிருக்கும் இடத்தை அடைகின்றோம்.