பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ♦ என் அமெரிக்கப் பயணம்

இந்தப் பகுதியில் அதிகமாக வாழ்பவர்கள் இஸ்லாமியர்கள். நாங்கள் செல்லும் நடைபாதையில் ஒரு மசூதி கூட உள்ளது இவர்கள் தொழுகைக்காக. ஒருவரையொருவர் பார்க்கும்போது, சற்று உற்று நோக்கினால் முறுவலிப்பார்கள். ஒருவர் ஒரு நாள் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அவருடைய பூர்வாசிரமம் எது என்று வினவ, அவர் தாம் கிழக்கு பாகிஸ்தான் என்று சொன்னார். ஓரிரண்டு மணித்துளிகள் அவரிடம் உரையாடினேன். ஆங்கிலம் தான் இணைக்க கைகொடுத்து உதவியது.

பூங்காவின் ஒரு மூலையில் சற்று உயர்வான இடத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான சறுக்கு அமைப்புகள், ஊஞ்சல் அமைப்புகள் உள்ளன. மூன்றிலிருந்து ஆறு வயது வரையுள்ள குழந்தைகள் மிகச் சுறுசுறுப்பாக அங்கும், இங்கும், குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதும், அடிக்கடி சறுக்கு அமைப்புகளில் ஏறுவதும் இறங்குவதும் சறுக்குவதும் எவருக்கும் கண் கொள்ளா மகிழ்ச்சி தரும் காட்சிகளாகும். பெரும்பாலும் தாய்மார்களுடன் தான் இவர்கள் வருவார்கள்; ஒரு சிலர் தாய், தந்தையருடன் வருவதுமுண்டு. தாய்மார்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டு தம் குழந்தைகள் பல்வேறு விதமாக விளையாடுவதைக் கண்டு மகிழ்வார்கள். சில பெற்றோர்கள் தம் சிறுகுழந்தைகளை ஊஞ்சல் போன்ற சிறு அமைப்பில் அமர வைத்து ஆட்டிக் கொண்டு மகிழ்வதையும் கண்டு மகிழ்ந்தோம். நானும் என் துணைவியாரும் ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டு இக் காட்சிகளில் ஈடுபட்டு மகிழ்வோம். காரைக்குடியில் நாங்கள் வாழ்ந்தபோது எங்கள் குழந்தைகட்கு இவ்வித வசதி வாய்ப்புகள் இல்லையே என்ற ஏக்கமும் எங்கள் மனத்தில் எழுவதுண்டு. (படம் - 7)

ஒருசமயம் என் மனைவி ஓர் இருக்கையிலும் நான் சற்றுத் தொலைவில் பிறிதோர் இருக்கையிலும் அமர்ந்து கொண்டு இருக்கும் போது என் அருகில் அமர்ந்திருந்த இரண்டு இஸ்லாமிய அன்பர்களுடன் உரையாட நேர்ந்தது. பாகிஸ்தானியரின் தனியான மனப்பான்மை தெளிவாகத் தெரிந்தது. போர்த் துறையைச் சார்ந்த ஒருவர் சமாதானப் பேச்சில் சமாதானமான முடிவுக்கு வருவது சிரமமாக இருக்கும் என்றேன். முஸ்ரஃப் பற்றிய பேச்சு எழுந்த போது நாட்டுத் தலைவராக வந்த முறை சரியல்ல என்று குறிப்பிட்டேன். அதற்கு அவர்கள் ‘பொதுமக்கள் தீர்ப்பு எடுப்பு’[1] மூலம் மீண்டும் தலைவராகி ஐந்தாண்டுகள் தலைவர் பதவியில் இருப்பார் என்றனர். அதற்கு நாட்டில் எதிர்ப்பு இருப்பதாகவும், அதற்கு அவருக்கே அந்த ஏற்பாட்டில் நம்பிக்கை இல்லாத குறிப்பையும் எடுத்துக் காட்டி, அவரே அமரிக்காவில்


  1. Referendum